(Source: ECI/ABP News/ABP Majha)
கிராம சபைக் கூட்டத்தில் துர்கா ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளிய அமைச்சர் மெய்யநாதன்: இதுதான் காரணம்!
கிராம சபை கூட்டத்தில் தான் அமைச்சராக காரணம் துர்கா ஸ்டாலின் என புகழாரம் சூட்டி அமைச்சர் மெய்யநாதன் பேசியுள்ளார்.
மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. முன்னதாக அதனை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சுதந்திர போராட்ட வீரரும், தனது அகிம்சை வழியால் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் காந்தியடிகள். 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி பிறந்த காந்திக்கு, இன்று 154வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அதில், “இந்த அரசு மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த 4 கிராம சபை கூட்டங்களின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது. மேலும் கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று உரைத்த காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 241 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணையாரின் ஊரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், ’’திருவெண்காடு ஊராட்சிக்கு தனி அதிகாரிகயை நியமித்தது ஆறுமாத காலத்துக்குள் ஊராட்சி தேவைகளை பட்டியலில் நிறைவேற்றிட தர நடவடிக்கை எடுக்கப்படும், இந்த கிராம சபை கூட்டம் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி, என் என்றால் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. பின்னர் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட தலைவர் வாய்ப்புகளை பெற்று தந்தார். அதற்கு முழு முதற்காரணம் இந்த மண்ணில் தமிழகத்திற்கே பெருமை சேர்க்க கூடிய துர்கா ஸ்டாலின்தான். நான் மீண்டும் ஆலங்குடியில் பேட்டியிடும் வாய்ப்பினை பெற்று தந்து, இந்த அரசியலில் இன்று அமைச்சராக உயர காரணமாக இருந்தவர் அவர் என்பதை நன்றியுடன் பதிவு செய்கிறேன்.
ஒரு வேளை இந்த வாய்ப்பை அவர் ஏற்படுத்த வில்லை எனில் அரசியலில் திசைமாறி போயிருப்பேன். நாங்கள் பெரிதும் மதிக்கின்ற அவர் பிறந்த மண்ணில், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புகழாரம் சூட்டினார்.