மேலும் அறிய
Advertisement
மொழிகளின் ஹாட் ஸ்பாட் இந்தியா - உலக தாய் மொழி தின சிறப்பு கட்டுரை
’’உலகின் பல மொழிகள் வழக்கொழிந்தமைக்கு அம்மொழியின் மைந்தர்களின் புறக்கணிப்பே முக்கிய காரணம். அத்தகைய புறக்கணிப்பை நம் தமிழன்னைக்கு நாம் ஒருபோதும் தர வேண்டாம்’’
மனித குலத்தின் அறிவு மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் தாய்மொழியைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதியன்று உலகத் தாய்மொழிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு'' என்று அறிவித்துள்ளது. வங்கதேச தலைநகர் டாக்காவில் 1952 ஆம் ஆண்டு மொழிக்காக நடந்த போராட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரஃபீக்குல் இஸ்லாம் எனும் வங்கதேச அறிஞர் ஜனவரி 1998ஆம் ஆண்டு முன்மொழிந்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த யுனெஸ்கோ அமைப்பு 1999 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த தீர்மானத்தை அங்கீகரித்தது. இதையடுத்து 2000ஆம் ஆண்டில் இருந்து உலக தாய்மொழிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
காலத்துக்கேற்ப ஒரு மொழி, தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்தால்தான் அது பரிணாம வளர்ச்சிக்கேற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொள்ளும். ஏராளமான தொன்மொழிகள் அத்தகைய தகவமைப்புத் திறன் இன்றி வழக்கொழிந்து போயுள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் இயேசு பயன்படுத்தியதாகக் கூறப்படும் அராமியா மொழி இன்று வழக்கிலேயே இல்லை. உலக அளவில் கடந்த நூறு ஆண்டுகளில் வழக்கில் இருந்த மொழிகளின் எண்ணிக்கை 7,000 இல் இருந்து 3,000 ஆக குறைந்துள்ளதாக மொழியியல் ஆய்வுகள் கூறுகின்றன. உலக அளவில் மொழி பன்முகத்தன்மை உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பென்சில்வேனியாவில் உள்ள ஸ்வார்த்மோர் கல்லூரியின் மொழியியலாளர் டேவிட் ஹாரிசன், இந்தியாவை "மொழி ஹாட்ஸ்பாட்" என்று குறிப்பிடுகிறார். உயர் மொழி பன்முகத்தன்மை, மொழி காணாமல்போகும் ஆபத்து மற்றும் குறைந்த அளவிலான ஆவணப்படுத்தல் இங்கு இருப்பதாகவும் அவர் கூறுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
உலக மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே செரிவான கலாசாரக் கூறுகளை உள்ளடக்கியதாகக் கருதப்படுகிறது. கிரேக்கம், லத்தீன் உள்ளிட்ட மொழிகள் அடங்கிய இந்த பட்டியலில் நமது தாய்மொழி தமிழுக்கு சிறப்பான இடமுண்டு. கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த மொழி எனப் புகழ் பெற்ற தமிழ் மொழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கியங்கள் தோன்றி விட்டன. தொன்மையான மற்றும் பழமையான மொழிகள் பல அழிந்த நிலையில், தமிழ் பழமையான மொழியாக இருந்தாலும் இப்போதும் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொண்டு இளமையுடன் திகழ்கிறது.
கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்பது உறுதியாகிறது. உலகின் பல மொழிகள் வழக்கொழிந்தமைக்கு அம்மொழியின் மைந்தர்களின் புறக்கணிப்பே முக்கிய காரணம். அத்தகைய புறக்கணிப்பை நம் தமிழன்னைக்கு நாம் ஒருபோதும் தர வேண்டாம். ஆங்கில வழியில் பயின்றாலும் அழகுத்தமிழை பயில வழி செய்து கொடுப்போம். பிழையின்றி பேசவும், எழுதவும் கற்றுக்கொடுப்போம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion