Power Pages 7: வரி கட்ட முடியாத நிலை! தோற்கடித்த தி.மு.க.வினரே வருந்தியது – காமராஜரின் அரசியல் களம்
Kamaraj: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த காமராஜர் மூன்று முறை தமிழ்நாடு முதலமைச்சராகவும், பிரதமர்களை தேர்வு செய்பவராகவும் அதிகாரமிக்கவராக இருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் ஏபிபி நாடு தளத்தில் தொடராக வெளியிடப்பட்டு வருகிறோம். 7வது தொடராக பிரதமர்களை தேர்வு செய்து கிங் மேக்கராக இருந்த காமராஜர் குறித்து காண்போம்.
இளமையில் சுதந்திர போராட்டம்:
காமராஜர், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவரது தந்தை குமாரசாமி தாயார் சிவகாமி அம்மாள் ஆவர். ஆறாம் வகுப்பு வரை கல்வி பயின்ற இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. சிறு வயதிலே சுதந்திர போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட காமராசர், தனது 16 வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றமைக்காக சிறை சென்றார்.
காமாராஜர், அரசியலில் சத்தியமூர்த்தியை குருவாக ஏற்றுக்கொண்டு பயணத்தை தொடங்கினார். அப்போது, 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சாத்தூர் தொகுதியில், நீதிக்கட்சி சார்பில் செல்வாக்கு மிகுந்த ராமசாமி நாடார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் காமராஜர் களமிறக்கப்பட்டார். காமராஜருக்கு ஆதரவாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பல தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர். அத்தேர்தலில் காமராஜர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைத்தது.
வரி கட்டமுடியாத நிலை:
அதே ஆண்டில் விருதுநகர் நகரசபைக்கு தேர்தல் நடந்தது. இதுகுறித்து காமராஜர் வாழ்வும் அரசியலும் புத்தகத்தை எழுதிய மு. கோபி சரபோஜி தெரிவித்துள்ளதாவது “ நகரசபை தேர்தலில் வரி செலுத்துபவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என விதிகள் இருந்தது. காமராஜரிடம் வரி செலுத்தக்கூடிய எந்த ஒரு பொருளும் இல்லாததால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது. இதை அறிந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர் பெயரில் ஆட்டுக்குட்டி ஒன்றை வாங்கி, வரிகட்ட நகரசபை வேட்பாளராக களமிறங்கினார்.
அந்த தேர்தலில் 7வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1940ல் சத்தியமூர்த்தி ஆதரவுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து செயலாளராக சத்தியமூர்த்தி பதவியேற்றார். குருவே சீடனுக்கு துணையாக இருந்த அதிசயம் நிகழ்ந்தது. 1952ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. காங்கிரஸ் சார்பில் நேரு பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
பொதுத்தேர்தலுடன் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் அதிக தொகுதிகள் பெற்றதையடுத்து கூட்டணியுடன் ராஜாஜி முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம் உட்கட்சிக்குள்ளே கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து பதவி விலகினார்.
முதலமைச்சர்:
இதையடுத்து, 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக காமராஜர் பதவியேற்றார். 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதலமைச்சராக பதவியேற்றார். 1962 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி முதலமைச்சராக பொறுப்பேற்ற காமராஜர் 1963 ல் பதவி விலகினார். அதற்கான காரணம் கட்சியை மூத்த உறுப்பினர்கள் முன்னின்று வழிநடத்த வேண்டும், இளைஞர்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்கிற காமராஜர் திட்டம் ( K PLAN ) . இதையடுத்து அக்டோபர் 9 அன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
கிங் மேக்கர்:
காமராஜர் மீது காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த மரியாதையுடன் இருந்தனர். 1964 ல் நேரு மறைவையடுத்து, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக்கியதில் காமராஜர் பங்கு முக்கியமானது. 1966ல் சாஸ்திரி மறைவையடுத்து இந்திரா காந்தி பிரதமராகியதில் காமரஜரின் பங்கு முக்கியமானது. கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வகியிலான கிங் மேக்கராக செயல்பட்டார்.
1967ல் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்ததை அறிந்து, தமிழ்நாட்டு அரசியலில் கவனம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அந்த தேர்தலில் எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரிடம் 1,285 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது திமுகவினர் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் கொண்டாட்டத்தில் இருந்தனர். அப்போது அண்ணா கூறியவை “ காமராஜர் தோற்க கூடாது நேரத்தில் தோற்றிருக்கிறார். இதுபோன்ற ஒரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வருவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும், இது நம்முடைய தோல்வி” என்றார்.
தோல்வி குறித்து காமராஜர் தெரிவிக்கையில் "மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி தி.மு.கவிற்கு வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன். யாராலும் ஆட்சிக்கு வர முடியும் என்கிற உள்ளதை பார்க்கும் போது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். தி.மு.க. மந்திரிசபை அமைத்து வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகள்" என்றார்.
காங்கிரஸ் பிளவு:
இந்திரா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து மோதலால்1969-ல் காங்கிரஸ் கட்சியிலிருந்து தனியாகப் பிரிந்து சென்று ஸ்தாபன காங்கிரஸைத் தொடங்கினார் காமராஜர். இதையடுத்து நாகர்கோயில் மக்களவை தொகுதியில் 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல் செய்த போது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்நிலையில்,1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மறைந்தார். அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.
காமராஜர் உயரத்திற்கு தமிழர்கள் யாரும் வரவில்லை:
காந்தியினுடைய எளிமை மற்றும் அகிம்சையால் கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டார் காமராஜர். இவர் மீது ராஜாஜி, இந்திரா காந்தி உள்ளிட்டோர் மிகுந்த அன்பும் மரியாதை வைத்திருந்தனர். ஆனால் மக்களை அணுகுவதில் மாறுபட்ட போது, எதிர்க்கவும் காமராஜர் தயங்கவில்லை. அவரின் மதிய உணவுத்திட்டம் இன்றுவரை செயல்படும் திட்டமாகவும் பல உலக நாடுகள் கூட பாராட்டும் திட்டமாகவும் உள்ளது.
ஒடுக்கப்படும் எளியமக்களை மேம்பாடு அடைய வேண்டும் என நினைத்தவர். ‘டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசிபோட்டு எந்த நோயாளி செத்தான்? பிற்படுத்தப்பட்ட எஞ்சினியர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுப்போச்சு? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும், எஞ்சினியரும் ஆகலாம், டாக்டரும் ஆகலாம்…’ என்று பேசினார்.
அண்ணா கூறியது போன்றே, இன்று வரை தேசிய அளவில் காமராஜர் உயரத்திற்கு தமிழர்கள் யாரும் வரவில்லை, வருவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகிறதா என்றால் தற்போதைய சூழ்நிலையில் சந்தேகமாகத்தான் உள்ளது. இன்றும் காமராஜர் ஆட்சி கொடுப்போம் என அரசியல் கட்சியினர் பரப்புரை மேற்கொள்வதை காணும்போது, அவர் ஏற்படுத்திய தாக்கத்தை உணரமுடிகிறது
Also Read: Power Pages-2: Ambedkar: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?