Power Pages- 2: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?
Ambedkar : அம்பேத்கரால் மாற்று சமூக மக்களின் வாக்குகளை பெற முடியவில்லை என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளிட்டு வருகிறோம். இரண்டாவது தொடராக சட்டமேதை அமபேத்கர் குறித்து காண்போம்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1951-52களில் நடைபெற்ற முதல் தேர்தலில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பால் வியாபாரியிடம் அம்பேத்கர் தோல்வியை தழுவினார். அம்பேத்கரின் இளமை காலம் முதல் இறுதி காலம் வரையிலான பயணங்களை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
இளமை காலம்:
பாபா சாஹேப் அம்பேத்கர், மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் என்கிற பகுதியில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். சுபேதார் ராம்ஜி மலோஜி சக்பால் மற்றும் பீமாபாய் தம்பதிக்கு 14-வது மற்றும் கடைசி குழந்தையாவார். ஆறு வயதில் தாயாரை இழந்ததால், அத்தையின் பராமரிப்பில் வாழ்ந்தார்.
அம்பேத்கர் தனது பள்ளிக் கல்வியை சத்தாராவில் பயின்றார். பின்னர் அவர்களது குடும்பத்தினர் பம்பாய்க்கு இடம் பெயர்ந்தனர். பள்ளிக் காலம் முழுவதும் தீண்டாமைக் கொடுமையால் அவதியுற்றார். பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின்னர் 1907 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
டாக்டர் பட்டம்:
அம்பேத்கர் தமது பட்டப்படிப்பை பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார். இந்தப் படிப்பிற்காக அபரோடாவின் மன்னர் சாயாஜி ராவ் கெய்க்வாட்டின் உதவித்தொகையை பெற்றார். பட்டப்படிப்பு முடித்த பின்னர் பரோடா சமஸ்தானத்தில் பணியாற்ற வேண்டும் என்ற உடன்படிக்கையின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்பட்டது. பரோடாவில் பணியாற்றிய போது தந்தையை இழந்தார். 1913 ஆம் ஆண்டில் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல டாக்டர் அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார். இது அவரது கல்வியில் திருப்புமுனையாக அமைந்தது. 1953 ஜனவரி 12 அன்று உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பி ஆர் அம்பேத்கர் டாக்டர் பட்டம் பெற்றார்.
Also Read: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?
முதல் சட்டத்துறை அமைச்சர்:
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர் நேரு முதல் அமைச்சரவையை உருவாக்கினார். அதில் மொத்தம் 15 அமைச்சர்கள் இடம் பெற்றிருந்ததில் அம்பேத்கர் மத்திய சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார்.1952ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தல் நடைபெற்றது. 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தொடங்கிய இந்த தேர்தல், 1952 பிப்ரவரி 21 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் நிறைவடைந்தது. மொத்தமுள்ள 489 இடங்களில் 364 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. சிபிஐ 16 இடங்களிலும், அம்பேத்கரின் கட்சி 2, பாரதிய ஜனசங்கம் 3, கிருபாலனியின் கட்சி 9 , சோசியலிஸ்ட் கட்சி 12 இடங்களிலும் வென்றது. சென்னை மாகாண தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வென்றது.
தேர்தல் தோல்வி:
அம்பேத்கர் மும்பை தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்தில் காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என சாடினார். அந்த தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு பால் வியாபாரியிடம் அம்பேத்கர் தோற்றார்.
அதையடுத்து 1954இல் மகாராஷ்டிராவில் உள்ள பண்டாரா தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அதில் சுமார் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்றார். அம்பேத்கரால் அந்த காலகட்டத்தில் மாற்றுச் சமூகத்தில் இருந்த மக்களைக் கவர முடியவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பேத்கருக்கு அழிவே கிடையாது:
1956 அக்டோபர் 15ம் தேதி அன்று நாக்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க விழாவில் புத்த மதத்தை தழுவினார். 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி உயிரிழந்தார்.
அம்பேத்கர் திரைப்படத்தில் நடித்த நடிகர் மம்முட்டியிடம் ‘டாக்டர் அம்பேத்கராக நீங்கள் நடித்த தருணம், நீங்கள் பெற்ற உணர்வும் என்ன?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மம்முட்டி தெரிவித்ததாவது, ‘எனக்கு நியாபகம் இருப்பது ஒன்றே ஒன்று தான். படப்பிடிப்பு புனே பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அப்போது நான் காட்சி ஒன்றில் நடிக்க அம்பேத்கர் வேடம் போட்டு வந்தேன். அந்நேரம் சிலர் காலில் விழுந்து வணங்கினார்கள். நான் இப்படியும் கூட ரசிகர்கள் எனக்கு இருக்கிறார்கள் என நினைத்தேன். பின்பு தான் அது அம்பேத்கர் என நினைத்து காலில் விழுந்தார்கள் என்று தெரிந்தது. அம்பேத்கருக்கு அழிவே கிடையாது. அவர் என்றும் நினைவில் இருப்பார்’ என மம்மூட்டி தெரிவித்திருந்தார்.
Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!