Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா!
சுதந்திரத்திற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பாண்மையுடன் வெற்றி பெற்று நேரு பிரதமானார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளிட்டு வருகிறோம். 4வது தொடராக முன்னாள் பிரதமர் நேரு குறித்து காண்போம்.
இந்தியாவில் தேர்தலை நடத்தவே முடியாது என உலக ஊடகங்கள் விமர்சனம் செய்த நிலையில், திருவிழா போல தேர்தலை நடத்தி வியக்க வைத்தார் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு. நேருவின் இளமைக்காலம் முதல் இறுதி காலம் வரை சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
நேருவின் இளமைக்காலம்:
1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்த இவர், மிகப் பெரும் பணக்காரரும் வழக்கறிஞருமான மோதிலால் நேரு மற்றும் சுவரூப ராணி ஆகியோரின் மகனாவார். இவர் லண்டனில் சட்டம் பயின்றாலும், வழக்கறிஞர் தொழில் பெரிதும் நாட்டம் காட்டாமல் சுதந்திர போராட்டத்தில் நாட்டம் காட்டினார். 1916 ஆம் ஆண்டு கமலாவை திருமணம் செய்தார். இவர்களின் ஒரே மகள்தான் முன்னாள் பிரதமர் இந்திரா கந்தி.
1919 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை இவரை மிகவும் பாதித்தது. இதையடுத்து காங்கிரசில் சேர்ந்த இவர், காந்தியடிகளால் பெரிதும் கவரப்பட்டார். 1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு எடுத்ததற்காக 1921 ல் நேரு முதல் முறையாக சிறைக்குச் சென்றார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 16 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டி இருந்தது.
1947 ஆண்டு ஆகஸ்ட் 14ம் நாள் பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று முகமது அலி ஜின்னா தலைமையிலான ஆட்சி அமைந்தது. இந்தியாவில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்று ஜவகர்லால் நேரு தலைமையிலான இடைக்கால ஆட்சி அமைந்தது.
தேர்தல் விமர்சனங்கள்:
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் குடியாரசானதை தொடர்ந்து 1951 ஆம் ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல ஊர்களில் மக்களுக்கு என்று தனியாக பெயர்களே இல்லை. பலரும் அவர்களின் குலத்தின் பெயரையே வைத்தே அழைக்கப்பட்டிருந்தனர். நேருவின் அரசாங்கமானது, அந்த மக்களுக்கு பெயர் மற்றும் முகவரியை கொடுத்தது. அப்போது இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 36 கோடி. அதில், வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களென 17 கோடி பேர் என பட்டியலிடப்பட்டனர். இதை பார்த்து பல ஊடகங்கள் கிண்டல் செய்தனர், எப்படி தேர்தல் நடத்த முடியும் என்று.நேரு அனைத்து விமர்சனங்களையும் கண்டுகொள்ளவில்லை. அவரது நோக்கம் இந்தியாவில் ஜனநாயக அடிப்படையில் தேர்தலை நடத்தி, உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, மக்களாட்சியை நிலைநிறுத்துவது என்பதாகவே இருந்தது.
1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கிய தேர்தலானது,1952 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடைபெற்றது. முதல் தேர்தலை, ஒரு திருவிழா போல நடத்திக் காட்டினார். மொத்தம் 489 இடங்களில் ஆயிரத்து 949 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவில், காங்கிரஸ் கட்சி 364 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. நேரு, உத்தர பிரதேசம் புல்பூர் தொகுதியில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அந்த நாள் இந்திய வரலாற்றின் பக்கமாக மாறியது. இந்திய ஜனநாயகத்தின் விதை விதைக்கப்பட்டது. உலகமே இந்தியாவை வியந்து பார்த்தது.
12 ஆண்டுகள் பிரதமர்:
இதனைத் தொடர்ந்து 1952ம் ஆண்டு நேரு தலைமையிலான இரண்டாவது அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் பெரும்பான்மையாக இருந்ததால் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தலைவர்கள் மட்டுமே அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலை 1962 வரை தொடர்ந்தது. தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதமராக இருந்த நெரு 1964ம் ஆண்டு மே 27ம் தேதி காலமானார்.
நேருவின் ஆட்சியில் சீனா போர், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் நேருவின் முடிவுகள் எதிர்மறையாக இருந்தாலும், அவருடைய எண்ணம் அதுவல்ல என்பதே உண்மையாகவே இருந்தது.
Also Read: பவர் பக்கங்கள் -2: Ambedkar: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?
பாகிஸ்தானில் நிலை இந்தியாவில் ஏன் இல்லை?:
ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வைஸ்ராய்க்கு அடுத்ததாக அதிகாரம் கொண்ட பதவியாக ராணுவத் தளபதியின் பதவி இருந்தது. இந்தியா சுதந்திர நாடாக உருவான நிலையில், மக்களாட்சி நிர்வாகத்தை முன்னிலைப்படுத்தும் விதமாக, ராணுவத்தை குடிமை நிர்வாகத்துக்கு பதில் சொல்லும் அமைப்பாக மாற்றும் பணியை கவனமாக மேற்கொண்டார், டெல்லியில் ராணுவத் தளபதி குடியிருந்த பவன் வளாகத்தை, பிரதமர் குடியிருப்பாக மாற்றினார.
இது சாதாரண நடவடிக்கையாக தோன்றினாலும், குடியரசுத் தலைவர் மாளிகை அடுத்தபடியாக அதிகாரமிக்க கட்டடமாக விளங்கிய ராணுவ நிர்வாகத்தை மாற்றியது குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்றும், ஒற்றைத் தலைமையின் கீழ் இருந்த பாதுகாப்புப் படையை, ராணுவம், விமானப்படை, கடற்படை என மூன்றாக பிரித்து மூன்று தளபதிகளின் தனித்தனி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார் நேரு. உள்நாட்டு சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் ராணுவத்தை ஈடுபடுத்துவதை தவிர்த்து, அதற்கென துணை ராணுவப் படைகளையும் அவர் உருவாக்கினார். பாகிஸ்தானைப் போல இந்தியாவில் அரசியலில் ராணுவத் தலையீடும், ராணுவ சர்வாதிகாரமும் ஏற்பட முடியாமல் போனதற்கு இந்த செயல்களே காரணம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளம்.
ஐஐடி, எய்ம்ஸ், பார்க் , இஸ்ரோ என இந்தியாவின் மிகப்பெரிய அமைப்புகளை உருவாக்கியவர், நேரு தான். பார்க் மற்றும் இஸ்ரோவை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி மேம்படுத்தினார். அந்த காலக்கட்டத்தில் அணு ஆராய்ச்சி குறித்தோ, விண்வெளி ஆராய்ச்சி குறித்தோ இந்தியாவில் கொண்டுவருவது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர், செயற்கைக்கோளால் நிதிதான் வீணாகுமே தவிர, என்ன பயன் என விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் நேரு, ஹோமி பாபாவையும் விக்ரம் சாராபாயும் திறம்பட பயன்படுத்தி அணு ஆராய்ச்சி மற்றும் விண்வெளியில் சாதனை புரிந்தார். இன்று இந்தியாவனது அணுமின் நிலைய நாடு, அணு ஆயுத நாடு, விண்வெளி சாதனை நாடு மற்றும் மிகப்பெரிய மக்களாட்சி நாடு என்று கருதபடுவதற்கு நேருவின் அடித்தளம் என்றால் சந்தேகமில்லை.
Also Read: பவர் பக்கங்கள்-1: Annadurai: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!
Also Read: பவர் பக்கங்கள்-3: Rajaji: உப்புச்சத்தியாகிரகம்.. இந்தி திணிப்பு; குலக்கல்வி; மதுவிலக்கு; போட்டியிடாமல் முதலமைச்சர்... இது ராஜாஜியின் அரசியல் பயணம்