CM Stalin: மூக்கை நுழைக்கும் பாஜக, CM ஸ்டாலின் எடுத்த அஸ்திரம் - 50 வருட கோரிக்கை பலிக்குமா?
CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.

CM Stalin: 5 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடுகிறது.
மாநில சுயாட்சி தீர்மானம்:
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மஹாவீர் ஜெயந்தி, வார இறுதி மற்றும் தமிழ்ப்புத்தாண்டு காரணமாக, தொடர்ந்து 5 நாட்கள் சட்டப்பேவரை செயல்படவில்லை. இந்நிலையில் இன்றைய அவை நடவடிக்கையின் போது, மாநிலங்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்க வலியுறுத்தும் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்ட வர உள்ளார். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
50 ஆண்டுகால கோரிக்கை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் மீண்டும் நிறைவேற்றப்பட உள்ளது. கடந்த 1974ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தாக்கல் செய்த மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம், நான்கு நாட்கள் தொடர்ந்த நீண்ட விவாதத்திற்குப் பிறகு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுமார் 50 ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவையில் மீண்டும் மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இதனை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார்.
கருணாநிதி அமைத்த குழு:
அண்ணாவின் மறைவை தொடர்ந்து 1969-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றார். அப்போது, மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டசபையிலும் அறிவித்தார். அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் லைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் அரசியல் துறை வல்லுநர்களான முன்னாள் சென்னை பல்கலைகழக துணைவேந்தர் ஏ. லட்சுமணசாமி முதலியார், நீதிபதி சந்திரா ரெட்டி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். 2 ஆண்டுகள் பல்வேறு ஆய்வுகளை நடத்திய அந்த குழு 1971-ம் ஆண்டு தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது..
குழுவின் மிக முக்கிய பரிந்துரைகள்:
- இந்திய அரசியல் சாசனத்தின் ஆளுநரின் விருப்பப்படி மாநில அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதை மாற்ற வேண்டும்
- இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி என்கிற IAS- IPS உள்ளிட்ட அனைத்திந்திய பணிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்
- மத்திய மற்றும் பொதுப் பட்டியலில் உள்ள முக்கிய அதிகாரங்கள், மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
- மாநில அரசுகளைக் கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 356, 357, 365 பிரிவுகளை நீக்க வேண்டும்
- மாநிலங்களுக்கு இடையேயான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், என்பன போன்ற முக்கிய பரிந்துரைகளை ராஜமன்னார் குழு வழங்கியது.
இந்த பரிந்துரைகளை வலியுறுத்தி தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னணியில் தான் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வகை செய்யும் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் முன்மொழிய உள்ளார்.
மூக்கை நுழைக்கும் மத்திய அரசு
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம் என பல்வேறு விவகாரங்களிலும் மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே முட்டல் மோதல் நிலவுகிறது. குறிப்பாக, ஆளுநர்களை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை செயல்படவிடாமல் முடக்க முயற்சிப்பதாகவும் திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மாநில உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் மாநில சுயாட்சி தீர்மானத்தை கொண்டு வரவுள்ளார்.

