“குழுவில் இடமில்லை, ஆலோசிப்பதுமில்லை” அதிருப்தியில் அதிமுக செங்கோட்டையன்..?
”எடப்பாடி பழனிசாமி ஒரு வழக்கில் சிக்கியப்போது அப்போதே மாவட்ட செயலாளர் செங்கோட்டையன். அவர்தான் அந்த வழக்கில் இருந்து எடப்பாடி மீண்டு வர உதவி செய்தார் என்று கூறப்படுகிறது”
அதிமுக-வின் முக்கிய நிர்வாகி, கொங்கு மண்டலத்தின் சீனியர், கட்சிக்கு விசுவாசி, முன்னாள் பவர்ஃபுல் அமைச்சர் என பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரரான செங்கோட்டையன் அதிமுகவில் தற்போது ஒரங்கட்டப்பட்டு வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.
யார் இந்த செங்கோட்டையன் ?
தன்னுடைய 21 வயதிலேயே குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக ஆகி, எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டு அதிமுகவில் அடையெடுத்து வைத்தவர்தான் செங்கோட்டையன். 1977ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய 29வயதிலேயே சத்தியமங்கலம் தொகுதியில் நின்று எம்.எல்.ஏவாக தேர்வானவர். ஈரோடு மாவட்ட செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், தலைமை நிலைய செயலாளர் என அதிமுகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் 9 முறை சட்டமன்ற உறுப்பினர், கடந்த அதிமுக ஆட்சி வரை அமைச்சர் என்ற முக்கிய பதவிகளை வகித்து அதிமுகவின் அசைக்க முடியாத தளகர்த்தராக இருந்தவர்தான் இந்த செங்கோட்டையன்.
செங்கோட்டையனுக்கு கிடைத்த முதல்வர் வாய்ப்பு
ஜெயலலிதா மறைந்து, சசிகலாவுக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டபோது கூவத்தூரில் நடைபெற்ற முதல்வர் தேர்வில் முன்னணியில் இருந்தவர்தான் செங்கோட்டையன். கட்சியில் செல்வாக்காக இருந்தாலும் செல்வம் என்ற பண விவகாரத்தில் தன்னால் மற்ற எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளை சமாளிக்க முடியாத என தெரிந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க ஆதரவு கொடுத்தவர் இவர். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்க எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்தப்போது அவருக்கு உறுதுணையாக இருந்து கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திச் செல்ல எடப்பாடி பழனிசாமிக்கு உறுதுணையாக இருந்தார் செங்கோட்டையன்.
ஓரங்கட்டப்படும் செங்கோட்டையன் ?
பின்னர் அதிமுக ஆட்சியை இழந்த பிறகு செங்கோட்டையனுக்கான முக்கியத்துவத்தை படிப்படியாக எடப்பாடி பழனிசாமி குறைக்கத் தொடங்கினார். குறிப்பாக, செங்கோட்டையனுக்கு ஜூனியராக இருக்கும் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு பொறுப்புகளை இருவருக்கும் கொடுத்த நிலையில், செங்கோட்டையனுக்கான வாய்ப்புகள் அதிமுகவில் அதிகள் அளவில் எடப்பாடியால் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை.
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய மாவட்டத்தில் கட்சியில் சாதாரண ஒரு நிர்வாகியாக இருந்தபோது செங்கோட்டையன் அப்போதே அதிமுகவின் மாவட்ட செயலாளராக இருந்தவர். பழனிசாமி ஒரு வழக்கில் சிக்கித் தவித்தப்போது அதிலிருந்து அவரை மீட்டுக் கொண்டுவந்தவர் செங்கோட்டையன் –தான் என கூறுவர். அப்படி தனக்கு சீனியராக இருக்கும் செங்கோட்டையனைதான் இப்போது எடப்பாடி பழனிசாமி அவருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்காமல் ஓரங்கட்டி வருகிறார் என்ற வருத்தம் செங்கோட்டையனுகு ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்
ஜெயலலிதாவிற்கே பிரச்சார ரூட் போட்டு கொடுத்தவருக்கு குழுவில் இடமில்லையா ?
அதிமுக பொதுச்செயலாளர், முதல்வராக இருந்த செல்வி. ஜெ.ஜெயலலிதா-வின் பிரச்சாரத் திட்டத்தை அவருக்கு அப்போது வகுத்து கொடுத்த முக்கியமான நபர்களில் ஒருவர் செங்கோட்டையன். எந்த தேர்தலாக இருந்தாலும் பிரச்சாரமாக இருந்தாலும் செங்கோட்டையனையும் இன்னொரு மூத்த அமைச்சராக 91 காலக்கட்டத்தில் இருந்து அழகு. திருநாவுக்கரசையும் ஆலோசிக்காமல் ஜெயலலிதா எங்கும் செல்லமாட்டார் என்ற அளவுக்கு இருவரும் ஜெயலலிதாவின் விசுவாசியாக, அவர் நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பவர்களாக இருந்தனர்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சியின் பலம், பலவீனம், செயல்திட்டம், வியூகம் என அனைத்தும் தெரிந்த சீனியரான செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுக்காமல், ஏன் அவரை எடப்பாடி பழனிசாமி ஒதுக்க முற்படுகிறார் என்ற கேள்வி கொங்கு மண்டல நிர்வாகிகள் மத்தியில் பலமாக எழுந்திருகிறது.