என்னைச் சோதிக்காதீங்க! எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுக்கிறாரா செங்கோட்டையன்?
அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தன்னை சோதிக்க வேண்டாம் என்று செங்கோட்டையன் பேசியிருப்பது மீண்டும் அதிமுக-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த விவசாயிகள் சார்பிலான பாராட்டு விழாவின் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதற்கு அவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததே காரணம் என்றார்.
நடந்தது என்ன?
இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரோட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில் செங்கோட்டையன் இதுதொடர்பாக பேசியுள்ளார். மேடையில் செங்கோட்டையன் பேசியதாவது, புரட்சித்தலைவர் படம் இல்லை. அம்மாவின் படம் இல்லை என்றுதான் சொன்னேனே தவிர, அந்த குழு வரும்போது அவர்களிடமும் சொன்னேன். என்னை அழைத்தார்கள். பார்த்தவுடனே சொன்னேன். என்னங்க அம்மா படம் இல்லை. தலைவர் படம் இல்லையே என்று சொன்னேன். இவ்வளவுதான்.
நான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நான் புறக்கணிக்கவில்லை. படம் இல்லை என்ற காரணத்திற்காகத்தான் நான் கலந்து கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏன்? என்னை வாழவைத்தவர்கள். நான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் அந்த இடத்திற்கு வித்திட்டவர்கள்.
என்னைச் சோதிக்காதீர்கள்:
பல்வேறு தியாகங்களைச் செய்தவர்கள் இருபெரும் தலைவர்கள். ஒரு 5 பேர் வந்தார்கள். அவர்களிடம் சொன்னேன். அதெல்லாம் சாென்னா வம்பா போயிடும். எத்தனையோ பேசுறாங்க? அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. சொல்றவங்க சொல்லட்டும். என்னைப் பொறுத்தவரை நேர்மையான பாதையில் தன்னலம் கருதாமல் பாடுபடுபவன். அதை மறந்துவிடக்கூடாது.
எத்தனையோ வாய்ப்புகள் வரும்போது அந்த வாய்ப்புகள் பற்றி கவலைப்படவில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னைச் சோதிக்காதீர்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள். இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை.
தலைவரின் வரலாறு வேறு:
தலைவர் உத்தரவிடுகிறார். தலைவரின் தலைமைக்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். 3 முறை தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர். எந்த சக்தியாலும் அவரை வீழ்த்த முடியவில்லை. தலைவரின் வரலாறு வேறு. திரையுலகமாக இருந்தாலும் அரசு உலகிலும் அவரை வெல்ல எவரும் இனி பிறக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டமன்ற தேர்தல்
அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க.விற்கு சசிகலா, தினகரன் தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் முக்கிய பலமாக கருதப்படும் செங்கோட்டையனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருப்பது தற்போது பெரும் பின்னடைவையும், குழப்பத்தையும் அ.தி.மு.க.வில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தன்னை சோதிக்க வேண்டாம் என்று செங்கோட்டையன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை இந்த விவகாரத்தில் விரைவில் செங்கோட்டையனை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

