US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது நரகம் பொழியும் என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

US Strikes Houthis: ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 20 பேர் பலி:
அதிபராக ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காசா போர் நேரத்தில் இஸ்ரேல் மற்றும் செங்கடல் கப்பல் போக்குவரத்து மீது தாக்குதல் நடத்திய ஹவுதி குழு, தற்போது அமெரிக்கா நடத்திய கடுமையான தாக்குதல்களால் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும் அடங்குவர் தெரிவித்துள்ளது. ஹவுத்திகளின் கோட்டையான யேமனின் வடக்கு சாதா பகுதியிலும் தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
U.S. military launches strikes on Houthi terror targets in Yemen, following an order from President Trump.
— Oli London (@OliLondonTV) March 16, 2025
pic.twitter.com/Mp7hmEYwva
”பதில் தாக்குதல் நடத்தப்படும்”
"ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமானவர்கள்" என்று ஹவுதிகளின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை "அமெரிக்க-பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு" மற்றும் வாஷிங்டனின் "குற்றவியல் மிருகத்தனம்" என்று ஹவுதி தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”நரகம் காண்பீர்கள்” - அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை:
இதனிடையே, ஈரானை கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான ஹவுதிகளின் அச்சுறுத்தல்களை மேற்கோள் காட்டி, "எங்கள் இலக்கை அடையும் வரை அதிகப்படியான கொடிய சக்தியைப் பயன்படுத்துவோம்" என்று டிரம்ப் சபதம் செய்துள்ளார்.
மேலும், “அனைத்து ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் சொல்கிறேன், உங்கள் நேரம் முடிந்துவிட்டது, உங்கள் தாக்குதல்கள் இன்றிலிருந்து நிறுத்தப்பட வேண்டும். நிறுத்தவில்லை என்றால், நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராதது போல் நரகம் உங்கள் மீது பொழியும். அமெரிக்க மக்களையோ, அவர்களின் அதிபரையோ... அல்லது உலகளாவிய கப்பல் பாதைகளையோ அச்சுறுத்தாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், எச்சரிக்கையாக இருங்கள், ஏனென்றால் அமெரிக்கா உங்களை முழுமையாகப் பொறுப்பேற்க வைக்கும்.” என எச்சரித்துள்ளார்.
மேலும் ஒரு போரா?
பென்டகனின் தகவல்களின்படி, ஹவுதிகள் 2023 முதல் அமெரிக்க போர்க்கப்பல்களை 174 முறையும், வணிகக் கப்பல்களை 145 முறையும் தாக்கியுள்ளனர். 2014 ஆம் ஆண்டு ஹவுதிகள் சனாவைக் கைப்பற்றினர், மேலும் சவுதி தலைமையிலான கூட்டணி தலையிடுவதற்கு முன்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றத் தயாராக இருந்தனர். 2022 போர் நிறுத்தத்திற்குப் பிறகு போர் பெரும்பாலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல் போக்குவரத்து மீதான ஹவுதி தாக்குதல்களால் மீண்டும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, ரஷ்யா-உக்ரைன் மற்றும் காசா போர்கள் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா புதியதாக ஒரு தாக்குதலை தொடங்கி இருப்பது உலக நாடுகளிடியே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

