(Source: ECI/ABP News/ABP Majha)
காலம் கடந்தும் கடைமடை பகுதிகளுக்கு சென்றடையாத காவிரி நீர் - ஒப்புக்கொண்ட அமைச்சர்
மேட்டூர் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் இதுநாள் வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்றடையாத பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குள் சென்றடைய வழிவகை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன்
இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், திட்டப் பணிகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியதாவது; பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துப் பணிகளும் சிறப்பான வகையில் 90 சதவீதத்துக்கும் மேலாக நிறைவுற்றிருக்கிறது. குறுவை சாகுபடி 39 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 26 ஆயிரம் ஹெக்டேருக்கு மேலாக அறுவடை முடிந்துள்ளது.
மாவட்டத்தில் எந்த இடத்திலும் நெல் மூட்டைகள் தேங்கியிருக்கும் நிலை இல்லை
சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் கையிருப்பில் உள்ளன. விவசாயக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பெரும்பாலும் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மீதம் உள்ள குறைந்த அளவிலான மூட்டைகளும் விரைந்து உரிய இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். மாவட்டத்தில் எந்த இடத்திலும் நெல் மூட்டைகள் தேங்கியிருக்கும் நிலை இல்லை.
இன்னும் ஒரு சில தினங்களில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர்
ஆண்டுதோறும் ஜுன் 12 -ம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும் வேளையில் இந்தாண்டு ஒருமாத காலம் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டு, தற்போது ஒருமாத காலம் என இரண்டு மாத காலம் கடந்தும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையாததால் விவசாயம் பதிப்பு குறித்த கேள்விக்கு தண்ணீர் இதுநாள் வரை சென்றடையாத பகுதிகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் சென்றடைவதற்கான செயல்பாடுகளை பொதுப்பணித்துறயினர் மேற்கொண்டுள்ளனர். இன்னும் மூன்று தினங்களில் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடையும்.
பயிர்க்காப்பீடு இழப்பீட்டு விடுபட்ட கிராமங்களுக்கு, அடுத்தக்கட்டமாக கிடைப்பதற்குரிய நடவடிக்கை
விவசாயிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுபட்ட கிராமங்களுக்கு, அடுத்தக்கட்டமாக கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆட்சியர் மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்குள் செல்லும் வகையில் சாலை அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றார். மயிலாடுதுறையில் மாவட்ட மைய நூலகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும், இன்னும் பணிகள் தொடங்கப்படாதது குறித்து கேட்டதற்கு, இது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள இடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் நூலக கட்டிடப் பணிகள் தொடங்கப்படும் என்றார். முன்னதாக பல்வேறு அரசு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.