இந்தியில் காய்கறி விலைப்பட்டியல் - மயிலாடுதுறையில் மகிழ்ச்சி அடைந்த வடமாநிலத்தவர்கள்
மயிலாடுதுறையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் எளிதாக காய்கறி விலைகளை அறிந்து கொள்ளும் விதமாக கடையில் தமிழுடன் சேர்த்து இந்தியிலும் விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்ட சம்பவம் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வட மாநிலத்தவர்கள் வருகை புரிந்து அனைத்து துறைகளிலும் கால் பதித்து தொழில்கள் செய்து வருகின்றன. வட மாநிலத்தவர்கள் குறைந்த ஊதியத்தில் வேலை செய்கின்றனர். மேலும் வியாபாரத்திலும் பொருட்களை குறைந்த விலைக்கு வழங்குவதாகவும், இதனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, மற்றும் வியாபாரத்தை நஷ்டம் என தமிழர்கள் சிலர் கூறினாலும், அவர்களின் வருகை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை, ஊதிய விகிதம் காரணமாக பல்வேறு கட்டிடவேலை, விவசாய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கி தொழில் செய்து வருகின்றனர். மயிலாடுதுறையில் பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஜெயின் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Actor Vijay Attacked: விஜய் மீது காலணி வீசிய நபர் குறித்து போலீசில் புகார்
மேலும் இப்பகுதியில் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வடமாநிலத்தவர் எளிதில் புரிந்து கொண்டு காய்கறி வாங்கும் வகையில் மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள ராஜசேகர் என்பவர் தனது காய்கறி கடையில் காய்கறிகளின் விலைப்பட்டியலில் தமிழ் மொழியுடன் சேர்த்து ஹிந்தி மொழியிலும் தனித்தனியாக ஸ்லேட்டில் எழுதி வைத்துள்ளார். உரிமையாளரின் இந்த செயல் பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் வடமாநிலத்தவரிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இது குறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், கடையில் விற்பனையாகும் அன்றைய காய்கறிகளின் விவரம் மற்றும் அதன் விலை உள்ளிட்டவை தனித்தனி ஸ்லேட்டில் எழுதி கடையின் முன்பு தொங்கவிடப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் அதிக அளவிலான வட மாநில தொழிலாளர்கள் உள்ளதால் காய்கறிகளின் விலைகளை அவர்கள் அறிந்து கொள்ளம் வகையில் விலைப்பட்டியல் வைக்க வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் தற்போது விலை பட்டியல் பலகை இந்தியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியில் விலையினை எழுதிய பின்னர் ஏராளமான வட மாநிலத்தவர்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து வடமாநிலத்தவர்கள் கூறுகையில், "காய்கறிகள் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலையில் விற்பனை ஆகிறது. இதனால் எங்கு குறைந்த விலையில் கிடைக்கும் என கேட்டு கேட்டு வாங்கும் நிலை உள்ளது. ஆனால் இந்த கடையில் விலையினை நாங்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வைத்துள்ளதால் நாங்கள் விலையினை எளிதில் அறிந்து கொண்டு காய்கறிகளை வாங்க உதவியாக உள்ளது" என தெரிவித்தனர்.