Ford Comeback: மீண்டும் இந்தியா வரும் ஃபோர்ட் நிறுவனம்: எஸ்யுவி பிரிவில் தடம்பதிக்க ஆலோசனை? புதிய திட்டம் என்ன?
Ford Comeback: சென்னை மறைமலைநகரில் செயல்பட்டு வந்த ஃபோர்டு நிறுவனம், மீண்டும் இந்தியாவில் தனது செயல்பாட்டை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ford Comeback: ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் பெரிய எஸ்யுவி வாகனங்களை CBU முறையில் கொண்டு வந்து, விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் ஃபோர்ட்:
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறும் நடவடிக்கைகளை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிறது. ஆனால், சென்னை மறைமலைநகரில் உள்ள உற்பத்தி ஆலையை விற்பனை செய்யும் முடிவை அண்மையில் அந்த நிறுவனம் ரத்து செய்தது. இதனால், ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தனது செயல்பாட்டை தொடங்கலாம் வதந்திகளை தூண்டியது. அதுமட்டுமின்றி, புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்து இருப்பதும், இந்த அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தங்களது உற்பத்தியை தொடங்கும் என்ற அனுமானத்தை வலுவடைய செய்துள்ளது.
காரணம் என்ன?
சமீபத்தில் ஃபோர்டு அதன் ஆலையை விற்பனையை ரத்து செய்ததன் மூலம், அங்கு எதிர்காலத்தில் மின்சார கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, முழுவதும் கட்டமைக்கப்பட்ட கார்களை (CBU) இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபோர்டு கார்களுக்கு என இந்தியாவில் பரவலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் இந்திய சந்தை உற்பத்தி பல நிறுவனங்களுக்கும் தொடர்ந்து லாபகரமாக இருப்பதை கருத்தில் கொண்டு, இந்தியாவிற்கு திரும்புவது தொடர்பாக ஃபோர்ட் நிறுவனம் பரிசீலனை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
ஃபோர்ட் ஆலையில் திறன்:
சென்னை மறைமலைநகரில் உள்ள ஆலையில் ஃபோர்ட் நிறுவனத்தின் உற்பத்தி கடந்த 2022ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. 350 ஏக்கரில் உள்ள அந்த ஆலையில் ஆண்டிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். ஒருவேளை ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டை மீண்டும் தொடங்கினால், என்னென்ன கார்களை எதிர்பார்க்கலாம் என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது. சில குறிப்பிட்ட கார் மாடல்களுடன், முழுவதும் கட்டமைக்கப்பட்ட கார்களுடன்(CBU) ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கலாம். அதில் மிகவும் பிரபலமான Endeavour மாடலும் இருக்கக் கூடும்.
இந்தியாவில் Endeavour கார்:
வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் புதிய தலைமுறை எண்டீவர் கார் மாடலானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. அதனை CBU முறையில் இந்திய சந்தைக்கு கொண்டு வரலாம். பெரிய எஸ்யுவிக்களுக்கான பிரிவில் ஃபார்ச்சூனர் கார் மாடல் மூலம் டொயோட்டா பிரபலமாக இருப்பதோடு, சந்தையிலும் பெரும்பங்கை தன்வசம் கொண்டுள்ளது.
இந்த சூழலில் விலையுயர்ந்த CBU வடிவத்தில் இருந்தாலும், எண்டீவரின் ரீ-எண்ட்ரி ஃபோர்டு பிராண்டிற்கு இந்தியாவின் பெரிய எஸ்யுவி பிரிவில் மீண்டும் உற்சாகத்தைத் தரக்கூடும். இதோடு, Mustang மற்றும் Ranger pick-up மாடல்களையும் இந்திய சந்தைக்கு கொண்டு வரலாம். CBU வடிவத்தில் வரும்போது எண்டீவர் மாடலின் விலையானது ஃபார்ச்சூனரை விட மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம், ஆனால் பிராண்ட் பெயர் மற்றும் இந்தியாவில் இந்த SUV வைத்திருக்கும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் காரணமாக விற்பனை நேர்மறையாக இருக்கக் கூடும்.