35 ஆண்டுக்கு முன் மாணவர்கள், இன்று ஆசிரியர்கள் - மயிலாடுதுறையில் நடந்த சுவாரஸ்யம்
கல்லூரிக்கால நினைவுகளுடன், "பசுமை நிறைந்த நினைவுகளே" என்ற திரை இசை பாடலை முன்னாள் மாணவர்கள் பாடி பகிருந்தனர்
35 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்த ஆசிரியர்கள் 45க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறையில் சந்தித்து பழைய பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருப்பனந்தாள் காசிமடத்திற்கு சொந்தமான ஸ்ரீ குமரகுருபர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1986 -1988 -ஆம் ஆண்டுகளில் பயிற்சி ஆசிரியர்களாக இருந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை தருமபுரம் குருஞானசம்பந்தர் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் குமரகுருபர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முன்னாள் முதல்வர் ரத்தினசாமிநாதன் தலைமையில் அப்போதைய ஆசிரியர் சகாயநாதன் ஆகியோருடன் முன்னாள் மாணவர்கள் 45 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சந்தித்து கலந்துரையாடினர். மேலும் தாங்கள் பயின்றபோது முதல்வராக இருந்த ரத்தினசாமிநாதன், ஆசிரியர் சகாயநாதன் ஆகியோரிடம் அவர்கள் ஆசிபெற்றனர். 35 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துகொண்டவர்கள் தங்கள் வாழ்நாள் அனுபவங்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது கல்லூரிக்கால நினைவுகளுடன், "பசுமை நிறைந்த நினைவுகளே" என்ற திரை இசை பாடலை முன்னாள் மாணவர்கள் பாடி பகிருந்தனர். தொடர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.