முதல்வர் படத்தை காணோம், பொங்கி எழுந்த திமுக ஒன்றிய குழு உறுப்பினர் - பதறி போன அதிகாரிகள்....!
சீர்காழி ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை குறித்து பேசும் வேளையில் அதனை காது கொடுத்து கேட்காமல் செல்போனில் மூழ்கிய அலுவலர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய குழு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையர்கள் இளங்கோவன், அன்பரசன் முன்னிலையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்நிலையில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் குறிப்பிடும் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலர்களில் சிலர் , உறுப்பினர்கள் பேசியது குறித்து குறிப்பு எடுக்காமல், தங்கள் செல்போனில் மூழ்கி, செல்போனை நோண்டிக்கொண்டிருந்த நிகழ்வு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இரண்டு மாதங்களுக்கு பின்னர் நடைபெற்ற கூட்டம்
அதேபோல் பாராளுமன்ற தேர்தல் காரணமாக சுமார் 2 மாதம் நடைபெறாமல் இருந்த கூட்டம் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று நடைபெற்று. ஆனால் இரண்டு மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் பிரச்சினைகளை பேசி அவர்களின் குறைகளை போக்க வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான 9 ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வராததும் பேசும் பொருளாக இருந்தது.
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர் நீதி குழுமத்தில் வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
முதல்வர் படம் எங்கே? கேள்வி எழுப்பிய உறுப்பினர்
கூட்டத்தின் போது திமுக உறுப்பினர் பஞ்சு.குமார், தேர்தல் விதிமுறைகள் முடிந்த பல நாட்கள் கடந்த நிலையில் தமிழக முதல்வர் படம் ஒன்று குழு கூட்ட அரங்கில் ஏன் வைக்கவில்லை? என கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து உடனடியாக பதறி அடித்து சென்ற ஊழியர்கள் ஒன்றிய குழு கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைபடத்தை எடுத்து வந்து கூட்டரங்கில் மாற்றினர். அதனைத் தொடர்ந்து கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.