மழையால் ஸ்தம்பிக்கும் மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் புகுந்த தண்ணீர்! பக்தர்கள் அவதி!
மயிலாடுதுறையில் பெய்து வரும் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை அங்கங்கே பெய்துள்ளது. குறிப்பாகக் கடந்த டிசம்பர் மாதம் மிகத் தீவிர கனமழை தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது. முதல் வாரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. அதேபோல டிசம்பர் மாதத்தில் பின்னாட்களில் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் மோசமாக இருந்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரியளவில் மழை எங்கும் இல்லாத ஒரு சூழலே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்றிரவு விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட வடக்கு டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. மழை இன்னுமே கூட தொடரும் நிலையில், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்தி பெற்ற பழமையான செவ்வாய் பரிகார ஸ்தலமான வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் நேற்று இருந்து பெய்து வரும் கனமழை காரணமாக கோயிலின் உள்ளே தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். கோயிலுக்குள் புகுந்த தண்ணீரை வெளியேற்ற கோயில் நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
Vegetable Price: கொட்டு மழை.. ஏற்ற இறக்கத்தில் காய்கறி விலைகள்.. இன்றைய பட்டியல் இதோ..
சீர்காழி நகர் பகுதியில் கனமழையால் சாலைகளில் தேங்கிய மழை நீர் வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்புகளை பாதிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் அதிகபட்ச சீர்காழியில் அதிகபட்சமாக 22 செ.மீ மழையும், கொள்ளிடத்தில் 18 செ.மீ மழையும், மயிலாடுதுறை 10 செ.மீ , மணல்மேடு 11 செ.மீ, தரங்கம்பாடி 8 செ.மீ குறைந்த பட்சமாக செம்பனார்கோயிலில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் மழைநீர் வடிவதற்கு வடிகால் வசதி போதிய அளவில் இல்லாத காரணத்தால் தென்பாதி பகுதிகளில் உள்ள நகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சாலைகளில் தேங்கியும் தண்ணீர் ஓடுவதற்கு வழியில்லாமல் சாலைகளிலும் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாகன ஓட்டிகளும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிகள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில், அவைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதேபோன்று பொங்கல் கரும்பு அறுவடையும் நடைபெற்று வரும் நிலையில், இந்த மழை விவசாயிகளுக்கு பெரும் இழப்பையும் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.