(Source: ECI/ABP News/ABP Majha)
TN Rain Alert: அடுத்த 3 நாட்களுக்கு இப்படி தான் இருக்கும்.. கனமழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
இன்று தமிழ்நாட்டில் மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பதிவாகி வருகிறது. கடந்த 2 நாட்களாக தொடர் மழை இருந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதத்திலும் தொடரும் காரணத்தால் இந்த மழை பதிவாகி வருகிறது.
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் சொல்வது என்ன?
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை என தனியார் வானியர் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், “ டெல்டா மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பதிவானது. திருவாரூர், சீர்காழி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 200 மி.மீ வரை பதிவானது. இந்நிலையில் இன்று சென்னைக்கு மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும் கனமழை இருக்கக்கூடும். மேகக்கூட்டங்கள் டெல்டா மற்றும் பாண்டிச்சேரி அருகே நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
விழுப்புரம் மாவட்டம் அருகே இருக்கும் மேகக்கூட்டங்கள் மெதுவாக நகர்ந்து செங்கல்பட்டு மற்றும் தென் சென்னை பகுதியை நோக்கி நகரும். இருப்பினும் சென்னைக்கு மிக மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை இருக்கும். அதேபோல், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பதிவாகும்” என தெரிவித்துள்ளார். அதேபோல் வரும் வியாழன் வரை இந்த மழை தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை: (மில்லிமீட்டர்)
நாகப்பட்டினம் 167.0, காரைக்கால் 122.0, புதுச்சேரி 96.0, கடலூர் 93.0, மீனம்பாக்கம் (சென்னை) 43.7, நுங்கம்பாக்கம் (சென்னை) 40.3, எண்ணூர் (சென்னை) 92.0, வி.ஐ.டி (செங்கல்பட்டு) 53.5, விருத்தாசலம் (கடலூர்) 50.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 70.5, தரமணி (சென்னை) 47.0, கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 46.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 10 ஆம் தேதி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.