மயிலாடுதுறை மாவட்டத்தின் இறுதி வாக்காளர் பட்டியலின் முழு விபரம் இதோ
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பேசியவர், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின்படி, மாநிலம் முழுவதும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த ஆண்டு அக்டோபர் 27 -ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கல் ஆகிய விண்ணப்பங்கள் இணைய வழியாகவும், வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களின் வழியாகவும் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் உரிய கால அவகாசத்துடன் உரிய வழிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 9 -ம் தேதி அன்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒத்த புகைப்படத்துடன் கூடிய வாக்காளர்கள், இரட்டிப்பு வாக்காளர்கள், இறந்து வாக்காளர்கள், வெளியூர்களுக்கு மாறுதலில் சென்ற வாக்காளர்கள் குறித்த விவரம் நவீன தொழில்நுட்பத்துடன் பட்டியலில் பெயர் நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் பிரத்யேகமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட 160 சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,22,065 ஆண் வாக்காளர்களும், 1,24,637 பெண் வாக்காளர்களும், 10 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 46 ஆயிரத்து 712 பேர் ஆகும். இதுபோன்று 161 மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,166 ஆண் வாக்காளர்களும், 1,18,247 பெண் வாக்காளர்களும் 10 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் என 2 லட்சத்து 34 ஆயிரத்து 423 பேரும் மற்றும் 162. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,32,812 ஆண் வாக்காளர்களும், 1,36,755 பெண் வாக்காளர்களும் 3 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 69 ஆயிரத்து 570 பேர் ஆகும். மாவட்டத்தில் 3,71,043 ஆண் வாக்காளர்களும், 3,79,639 பெண் வாக்காளர்களும், 23 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,50,705 பேர் வாக்காளர் பட்டியலில் உள்ளனர்.
இறுதியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும் போது தற்சமயம் 12,822 எண்ணிக்கையிலான வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். வழக்கம்போல் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். தற்சமயம் 18,103 வாக்காளர்கள் புதிதாக பெயர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 5821 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர் 11,690 நபர்கள், மூத்த குடிமக்கள் 14,425 நபர்கள், மாற்றுத்திறனாளிகள் 8,158 நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் ஆண், பெண் பாலின சதவிகிதம் 1023 ஆகும். (சட்டமன்ற தொகுதி வாரியான பாலின விகிதம் சீர்காழி 1021, மயிலாடுதுறை 1018, பூம்புகார் 1030 ஆகும். 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பினை ஒட்டிய 2024-ம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட உத்தேச மக்கள்தொகை அடிப்படையில் 71.89 சதவிகிதம் அதாவது 7,50,705 நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சட்டமன்ற தொகுதிவாரியான மக்கள் தொகையில் வாக்காளர் விகிதம் சீர்காழி 71.83 % மயிலாடுதுறை 75.33 % பூம்புகார் 69.21% மாவட்டத்தை பொறுத்தவரை 18 முதல் 19 வரையிலான வயதுடையவர்கள் 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 2024 ம் ஆண்டு திட்டமிடப்பட்ட உத்தேச மக்கள் தொகையின்படி, இளைஞர்கள் எண்ணிக்கை 24,668. அதாவது மக்கள் தொகையில் 2.36 சதவிகிதம் ஆகும். ஆனால் தற்போதைய வாக்காளர் பட்டியலில் 11690 நபர்கள் அதாவது 1.12 சதவிகிதம் இடம் பெற்றுள்ளனர். இதில் கடந்த வரைவு வாக்காளர் பட்டியலை காட்டிலும் 7019 நபர்கள் கூடுதலாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 160.சீர்காழி (தனி) சட்டமன்ற தொகுதியில் பாகம் எண்.68 வடரங்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 234 வாக்காளர்களும் பாகம் எண்.192 திட்டை சீர்காழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிகப்பட்சம் 1371 வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 161.மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பாகம் எண்.150 மயிலாடுதுறை டி.இ.எல்.சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 278 வாக்காளர்களும் பாகம் எண்.124 மயிலாடுதுறை கவிஞர் வேநாயகம் நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிகப்பட்சம் 1430 வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
162.பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பாகம் எண் 162 மாதிரிமங்கலம் கல்யாணி வெங்கட்ராமன் உதவிபெறும் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 396 வாக்காளர்களும் பாகம் எண்.186 கொழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிகப்பட்சம் 1384 வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மக்களாட்சியை வலுப்படுத்துவதில் தகுதியுள்ள அனைவரும் 100 சதவிகிதம் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதோடு மட்டுமல்லாமல் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கைகளில் பொது மக்கள் தன்னார்ல அமைப்புகள், அரசியல் கட்சியினர் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.