தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டிய குழந்தைகள் தின விழா! 700-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதீனகர்த்தர் அருளாசி!
தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு ஆதீனகர்த்தர் அருளாசி வழங்கினார்.

மயிலாடுதுறை: இந்தியாவின் முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14 -தேதியான இன்று, நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ஜவஹர்லால் நேரு. அவர் குழந்தைகள் மீது அலாதி பிரியம் வைத்திருந்தார். அதே போன்று, குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்தினார். இவரின் பிறந்தநாளை தான் இந்தியாவில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இன்று நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத் திருமடத்திலும், இப்பண்டிகை பாரம்பரியச் சிறப்புடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் சுமார் 700-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த சிறப்பான விழாவில் பங்கேற்று, ஆதீனகர்த்தரின் அருளாசியைப் பெற்றனர்.
தருமபுரம் திருமடத்தில் திரண்ட பள்ளி குழந்தைகள்
பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவுக்காக, பள்ளி வளாகத்தில் இருந்து அனைத்துக் குழந்தைகளும் அருகிலுள்ள தருமபுரம் ஆதீனத் திருமடத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். திருமடத்தின் வளாகம் முழுவதும் குழந்தைகளின் மகிழ்ச்சியான ஆரவாரத்தால் நிரம்பி, விழா ஒரு புதிய பொலிவுடன் காட்சி அளித்தது.
முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கமாக, பள்ளி மாணவன் ஒருவன் இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் வேடமணிந்து வந்திருந்தான். அவன், விழாவின் நாயகனான தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை மலர்க்கொத்து கொடுத்து மிகுந்த மரியாதையுடன் வரவேற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆதீனகர்த்தர் வழங்கிய அருளாசியும், இனிப்பும்
திருமடத்தின் உள்ளே நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்வில், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று, குழந்தைகள் தின விழாவைச் சிறப்பித்தார். அவர், எதிர்காலத் தூண்களாகிய குழந்தைகளை வாழ்த்தி, அவர்களுக்கு தனது அருளாசிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அங்கு கூடியிருந்த 700-க்கும் மேற்பட்ட சிறார்களுக்கும் குருமகா சன்னிதானம் அவர்கள் தம் திருக்கரங்களால் சுவையான பழங்கள் மற்றும் விதவிதமான இனிப்புகளை அன்புடன் வழங்கினார். ஆதீனத்தின் கைகளில் இருந்து பிரசாதம் பெற்ற குழந்தைகள் அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
குழந்தைகளின் உற்சாக பெருகு
குழந்தைகள் தின விழா என்பது, நாட்டின் எதிர்காலமாகத் திகழும் பிஞ்சுகளின் உரிமைகளையும், அவர்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் ஒரு சிறப்பான நாளாகும். தருமபுரம் ஆதீனத்தின் இந்த முயற்சி, கல்வி மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைச் சிறப்பிக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
ஆதீனம் வழங்கும் இந்தச் சிறப்பான வரவேற்பும், அருளாசியும், பரிசுகளும் குழந்தைகளுக்கு மிகுந்த ஊக்கத்தையும், மனதில் நீங்காத மகிழ்ச்சியையும் அளித்தது. குழந்தைகள் அனைவரும் தங்கள் பிரியத்துக்குரிய ஆதீனகர்த்தரிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றபின்பு, புத்துணர்ச்சியுடன் மீண்டும் பள்ளிக்குத் திரும்பினர்.
தருமபுரம் ஆதீனத்தின் இத்தகைய கனிவான செயல்பாடு, அப்பகுதி மக்களிடையேயும், பக்தர்களிடையேயும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான இந்த விழா, வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, அவர்களுக்குக் கல்வி மற்றும் கலாச்சார மதிப்புகளை உணர்த்தும் ஒரு ஆசீர்வாதப் பணியாகவும் திகழ்ந்தது.






















