ஆட்சியர் செயல்பாடு காரணமாக குவியும் மனுக்கள் - எந்த மாவட்டம் அது தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுவதை அடுத்து ஒவ்வொரு வாரமும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது ஆட்சியர் அதிக முக்கியத்துவம் கொடுத்து தீர்வு கண்டு வருவதால் ஆட்சியர் மீது கொண்ட நம்பிக்கையால் மனு அளிப்பவர்களின் எண்ணிக்கை வாரம்தோறும் அதிகரித்து வருகிறது.
மக்கள் குறைதீர் கூட்ட நாள்
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறைதீர் கூட்ட நாள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாவது ஆட்சியாளராக பொறுப்பேற்ற மகாபாரதி பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் ஆட்சியர் மிகுந்த நன்மதிப்பைப் பெற்று திகழ்ந்து வருகிறார்.
மக்கள் நம்பிக்கை பெற்ற ஆட்சியர்
குறிப்பாக ஆட்சியாளர் கவனத்திற்கு வரும் பிரச்சனைகள் அனைத்திலும் தனி கவனம் செலுத்தி அதனை சரி செய்து கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை கேட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அந்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளையும் தனக்கு சமர்ப்பிக்க கூறி மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுவருவதால முன்பு எப்போதும் இல்லாத அளவாக தற்போது குறைதீர்க்க கூட்டத்திற்கு ஆட்சியர் மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக ஏராளமான மக்கள் படையெடுத்து வந்து தங்கள் குறைகளை மனுவாக சமர்ப்பித்து செல்கின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் அவருக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அன்றைய தினமே பணிக்கு திரும்பி மக்கள் குறைகளை கேட்டறிந்தார். இது மயிலாடுதுறை மாவட்ட மக்களிடையே பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே நாளில் பெறப்பட்ட 369 மனுக்கள்
அதன் ஒன்றாக இன்று மயிலாடுதுறை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அதில் 369 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகைபுரிந்து மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குறைகள் குறித்து மனுக்களை அளித்தனர்.
மனுக்களின் விபரம்
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், கோரி 68 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 79 மனுக்களும், முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி 47 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 38 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவிதொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 23 மனுக்களும், அடிப்படை வசதி கோரி 18 மனுக்களும், நிலஅபகரிப்பு தொடர்பாக 29 மனுக்களும், கலைஞர் உரிமைத்தொகை வேண்டி 39 மனுக்களும், தொழிற்கடன் வழங்க கோரி 27 மனுக்களும் என மொத்தம் 369 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா 5900 ரூபாய் என மொத்தம் 29,500 ரூபாய் மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.