இதனால்தான் உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் ஸ்டாலின் - கருப்பு முருகானந்தம்
பல ஆண்டுகளாக உழைப்பவர்களால் மகனுக்கு பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காகத்தான் ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும்போதே, உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் என கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
திமுகவில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களால் தனது மகனுக்கு பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும்போதே உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
பாஜக உறுப்பினர் சேர்க்கை
பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில் கிறிஸ்தவர்களின் ஆதரவை பெற பாஜக முயற்சி மேற்கொண்டது. இதில் பலன் கிடைத்ததால், திரிச்சூரில் நடிகர் சுரேஸ் கோபி மூலம் பாஜக முதல் வெற்றியை பெற்றது. இந்நிலையில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தொடங்கி உறுப்பினர்களை பாஜகவில் சேர்த்து வருகின்றனர்.
சிறுபான்மையினர் பிரிவு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு
இதில் சிறுபான்மையினர் பிரிவு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக கட்சி தலைமையகத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு வரும் கடந்த மாதம் 27-ம் தேதி பயிலரங்கம் ஒன்றை நடத்தியுள்ளது. இதில் சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர் துஷ்யந் குமார் கவுதம் மற்றும் மாநில பிரதிநிதிகள் பங்கேற்னர். இது குறித்து பாஜக சிறுபான்மையினர் பிரிவுதலைவர் ஜமால் சித்திக்கூறுகையில், சிறுபான்மை யினத்தை சேர்ந்த 50 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக பயிலரங்கம் நடத்தப்பட்டு, அதில் உறுப்பினர்களை மிஸ்டு கால், க்யூஆர் கோடு, நமோ இணையதளம் மற்றும் கட்சியின் இணையதளம் ஆகியவற்றின் மூலம் சேர்ப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது பாஜகவில் சிறுபான்மையினர்களை சேர்க்கும் நடவடிக்கைக்கு பொறுப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஜோஜோ ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நிசார் உசைன் ஷா, மவுலானா ஹபிப் ஹைதர், ஃபகிம் சைபி, முகமது சதாம் மற்றும் ஜப்ரீன் மகஜாபீன் ஆகியோர் துணை பொறுப்பாளர்களாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் பாஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை
அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக சார்பில் மயிலாடுதுறையில் பாஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மத்திய அரசு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட துணைத்தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேதுராமன், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கருப்பு முருகானந்தம்
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சி மற்ற அரசியல் இயக்கங்களை காட்டிலும் வேறுபட்ட கட்சி, ஏன் என்றால் பாஜகவில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைப் போன்று வாரிசு அடிப்படையில் நிரந்தர தலைவர்கள் கிடையாது. இக்கட்சியில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர்கள் மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழைய உறுப்பினர்களும் தங்களை தற்போது புதுபித்து கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கூட கடந்த 2 -ம் தேதி புதிய உறுப்பினராக தன்னை புதுப்பித்துக் கொண்டார். அதேபோன்று தமிழகத்தில் பாஜக ஒருங்கிணைப்பாளரான எச்.ராஜா கமலாயத்தில் தன்னை புதுப்பித்துக் கொண்டார்.
2 -ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையில் பாஜக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டனர். பாஜக இந்த இரண்டு மாதம் காலம் உறுப்பினர் சேர்க்கை மட்டுமே மையமாக கொண்டு செயல்பட முடிவு செய்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பு, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், யாத்திரைகள் நடத்துவதை விட இந்த இரண்டு மாதஙாகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கட்சி, சமுதாயம், மதம் அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்று மோடிக்கு ஆதரவு தரவேண்டும் பாஜகவிற்கு வரவேண்டும் என அழைப்பது எங்களது திட்டம். அதன் அடிப்படையில் தற்போது வீடு வீடாக சென்று மக்களை பாஜிவினர் சந்தித்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை பகுதியில் ஒரு முகாம் அமைத்து அதில் ஏராளமான உறுப்பினர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் இலக்கை
பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 17 -ம் தேதி முதல் அக்டோபர் 2 -ம் தேதி வரை பாஜகவினர் ஏதேனும் ஒரு நற்காரியம் செய்ய வேண்டும் என கூறப்படுள்ள நிலையில் தற்போது மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்கியுள்ளோம். மாநில தலைவர் அண்ணாமலை தலைமைக்கு அளித்துள்ள 1 கோடி உறுப்பினர்களை பாஜகவில் இணைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட்டு வருகிறோம். மிகப்பெரிய அளவில் மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். திமுக , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் தீவிரமாக செயல்பட்டவர்கள் கூட தற்போது பாஜகவின் தங்களை இணைந்து கொண்டு வருகின்றனர். ஆகையால் ஒரு கோடி என்ற இலக்கை கண்டிபாக நாங்கள் அடைவோம்.
மது ஒழிப்பு மாநாடு என்பது கேலிக்கூத்து
மாநில அரசு மது விற்பனையை ஊக்குவிக்கும் நிலையில், அவர்களையும் அழைத்து விசிக மது ஒழிப்பு மாநாடு நடத்தவுள்ளது கேலிக்கூத்தாக உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது.திமுக கூட்டணியில் உள்ள கூட்டனி கட்சியினரும் திமுக போன்றே செயல்படுகின்றனர். அவர்கள் யாரும் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பதோ, மக்கள் பிரச்சனைக்காக நிற்பதோ, சமூக நீதிக்கா போராடுவதோ கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவர்களுக்கு ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருப்பது மட்டும் நோக்கம். தற்போது ஆட்சியில் பங்கு கேட்கும் முயற்சியாக இந்த மது ஒழிப்பு மாநாடு இருக்கலாம் என்றார்.
கலைஞரை விமர்சித்த கருப்பு முருகானந்தம்
திமுக என்பது கலைஞரின் சொத்து அதனை ஆண்டு அனுபவித்து விட்டு, தள்ளாடும் வயதில் தள்ளுவண்டியில் சொல்லும் வரை அவர் அந்த பதவியே விட்டு விலகவில்லை, தனது மகனுக்கு கொடுப்பதற்கு கூட அவர் தயாராக இல்லை, அதன் பிறகு அவர் மகன் முதலமைச்சராக உள்ளார். அவர் தன் தந்தை போல் இல்லாமல் தான் இருக்கும் காலத்திலேயே தனது மகனுக்கு பிரச்சினை வந்துவிட கூடாது, நாளை யாரும் ஆட்சியில் உரிமை கோரிவிட கூடாது, யாரும் முதலமைச்சர் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்துவிட கூடாது. ஏன் என்றால் திமுகவில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களால் தனது மகனுக்கு பதவி கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காகத்தான் தமிழக முதல்வர் ஆட்சியில் இருக்கும்போதே உதயநிதியை ஆட்சியில் அமர்த்தப் பார்க்கிறார் என்றார்.