Mayiladuthurai Leopard: மீண்டும் ஒரு ஆடு காலி.. மயிலாடுதுறையில் வனத்துறைக்கு 4வது நாளாக ஆட்டம் காட்டும் சிறுத்தை!
மயிலாடுதுறை மாவட்டத்தின் நகரப்பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உலா வரும் சிறுத்தை மீண்டும் ஒரு ஆட்டை கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நெருக்கடி காரணமாக விலங்குகளின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து கொள்வதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மயிலாடுதுறை மாவட்டத்தை அலற வைத்துள்ளது.
அம்மாவட்டத்தின் நகரப்பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. அப்பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களை எல்லாம் வேட்டையாடிய சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசாரும், வனத்துறையினரும் சிறுத்தையை பிடிக்கும் பணியிலும், பொதுமக்களை பாதுகாப்பதிலும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை மீண்டும் செம்மங்குளம் பகுதிக்கு வந்த சிறுத்தை வாய்க்காலில் சுற்றித்திரிந்த பன்றியை கடித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் சிறுத்தையை பார்த்தால் 9360889724 என்ற எண்ணை அழைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனிடையே மயிலாடுதுறையில் செயல்படும் 9 பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு காவல், தீயணைப்பு, வனத்துறை சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் 4வது நாளாக சிறுத்தையை பிடிக்கும் பணி நடக்கும் நிலையில், இதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராட்சத கூண்டுகள், வலைகள், 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் எல்லாம் வைக்கப்பட்டும் சிறுத்தை இன்னும் சிக்காமல் உள்ளது. ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு ஆகிய இடங்களில் கூண்டுகளோடு வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு ஆட்டுக்குட்டி சிறுத்தையால் வேட்டையாடப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் இன்று மேலும் ஒரு ஆட்டுக்குட்டியை சிறுத்தை வேட்டையாடி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆட்டின் தலை மற்றும் முன் கால்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Watch Video: சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை முட்டிய எருது.. சிசிடிவி வீடியோ வைரல்!