ABP Cvoter Exit Poll 2024: மகாராஷ்டிராவில் NDA - INDIA கூட்டணி இடையே கடும் போட்டி! பீகாரில் அதிர்ச்சியளிக்கும் சர்வே
CVoter Opinion Poll: நாட்டிலேயே அதிக மக்களவைத் தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்திற்கு அடுத்துள்ள மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
ABP-C Voter Exit Poll: 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் தொடர்பாக ABP செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
மகாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் எந்த கட்சிக்கு பலம் உள்ளது என ABP – சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என பார்ப்போம்.
மக்களவை தேர்தல்:
இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
ஏற்கனவே, ABP செய்தி குழுமம் மற்றும் சி வோட்டர் இணைந்து, 4 முறை தேர்தல் முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இந்நிலையில், தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் தற்போது 5வது முறையாக கருத்து கணிப்புகளை நடத்தி வெளியிட்டுள்ளன. இந்த தேர்தல் கணிப்பு முடிவுகளானது, மாநில வாரியாக கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கடும் போட்டி:
இந்தியாவில் உத்தர பிரசே மாநிலத்திற்கு அடுத்தபடியாக அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு கடுமையான போட்டி இருக்கும் என தெரிகிறது.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாஜக கூட்டணி 45.3 சதவிகித வாக்குகளை பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி 44 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் இதர கட்சிகள் 10.7 சதவிகித வாக்குகளை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 22 முதல் 26 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 23 முதல் 25 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
பீகார்:
பீகார் மாநிலத்தில், காங்கிரஸ் கூட்டணி 38.6 சதவிகித வாக்குகளையும், பாஜக கூட்டணி 51.9 சதவிகித வாக்குகளையும் , இதர கட்சிகள் 9.5 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எத்தனை தொகுதிகள் பெறும் என்பதன் அடிப்படையில் பார்க்கும் போது, மொத்தம் உள்ள 42 தொகுதிகளில், இந்தியா கூட்டணி 3 முதல் 5 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 34 முதல் 38 தொகுதிகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு முறை:
சி வோட்டர் நடத்திய இந்தக் கருத்து கணிப்பானது, தேர்தல் நடைபெற்றதற்கு பின்பு, எடுக்கப்பட்டவையாகும். கருத்துக்கணிப்பானது வாக்களிக்க தகுதி உள்ளவர்களிடம் நடத்தப்பட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.