எல்லை தாகம் தீர்க்க புறப்பட்ட புயல்.... போலீசாரிடம் சிக்கி சின்னாபின்னமான கதை!
இரு மாநில எல்லையில் உள்ள குடிமகன்களின் மது பிரச்னையை தீர்க்க திடீர் கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள் உருவாகியுள்ள நிலையில், இந்த பொது சேவைக்கு மிதி சேவை தான் சரியாக இருக்கும் என போலீசார் களமிறங்கியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கள்ள சாராயம் காய்ச்சுவதாக எழுந்த புகாரையடுத்து வனப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் தீவிரம். தம்பிரான் ஊத்து எனும் மலை பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சிய இருவர் கைது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் கடுமையாக அமலில் உள்ளது. இந்நிலையில் அனைத்து கடைகள் வர்த்தக நிறுவனங்கள் என அத்யாவசிய தேவையாக இயங்கும் அனைத்து கடைகளும் செயல்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளும் திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்கு விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மதுபானம் கிடைக்காமல் இருப்பதால் மது பிரியர்கள் அல்லல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மது பிரியர்கள் போதைக்காக பல்வேறு தவறான வழிகளில் செல்கின்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன.
வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படும் சம்பவங்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைதும் நடைபெற்று வருகிறது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளவர்கள் மது பாட்டில்கள் கிடைக்காததால் கஞ்சா போன்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். கஞ்சா கிடைப்பதிலும் சிக்கல்கள் இருக்கும் நிலையில் தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக தேனி மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கள்ள சாராயம் காய்ச்சுவதை தடுக்கவும் விற்கப்படுபவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஒவ்வொரு மலையடிவார பகுதிகளை ஒட்டியுள்ள ஊர்கள் மற்றும் வனப்பகுதிகள் என தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்
அப்படி ஈடுபட்டு வரும் நிலையில் கம்பம் அருகே ஓடைப்பட்டி பேரூராட்சிக்கு அருகே மலை பகுதியான தம்பிரான் ஊத்து என்ற மலைப்பகுதியில் பட்டை சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக ஓடைப்பட்டி காவல் நிலைய தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து மலைப் பகுதியில் ரோந்து சென்றனர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டிருந்த ஓடை பட்டி காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்த முருகன், மற்றும் அதே தெருவை செர்ந்த சேகர் என்ற இருவர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து இரண்டு லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த இருவரையும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இதே போல தேனி மாவட்டத்தில் மலையடிவாரங்கள் மற்றும் வன பகுதிகளுக்குள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்து வரும் புகாரையடுத்து மலை பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழக கேரள எல்லை பகுதிகளான கம்பம், போடி மெட்டு உள்ளிட்ட மலையடிவார பகுதிகளில் போலிசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாநில எல்லையில் உள்ள குடிமகன்களின் மது பிரச்னையை தீர்க்க திடீர் கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள் உருவாகியுள்ள நிலையில், இந்த பொது சேவைக்கு மிதி சேவை தான் சரியாக இருக்கும் என போலீசார் களமிறங்கியுள்ளனர். ‛கவலைப்படாதீங்க.... குடிமகன்களே நாங்க இருக்கோம்... உங்க பிரச்னையை தீர்க்க,’ என களமிறங்கிய கள்ளச்சாராய உற்பத்தியாளர்களை, ‛அப்போது நாங்கு எதுக்கு இருக்கோம்,’ என , போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வருகின்றனர்.