திமுகவில் ஓபிஎஸ்: மூன்று முறை முதல்வர் முதல் புதிய அரசியல் அத்தியாயம் வரை முழு விவரம்
சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் நீண்டகாலம் முக்கிய பொறுப்புகளில் வகித்தவரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்தவருமான ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முக்கிய விசுவாசியாக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ் தற்போது திமுகவில் இணைந்து இருக்கிறார், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக இது மாறி இருக்கிறது.
கூடிய விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். உடன் அவருடைய மகன் ரவீந்திரநாத்தும் வந்திருந்தார். ஓபிஎஸ் 1973 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவில் இருந்து வருகிறார். தேனி மாவட்டத்தில் தனக்கென ஆதரவாளர்களை கொண்டுள்ள ஓபிஎஸ் படிப்படியாக உயர்ந்து கட்சியில் ஜெயலலிதாவின் நம்பிக்கையான நபராக உருவெடுத்தார்.
ஜெயலலிதா சிறை சென்ற போது தன்னுடைய முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் இடம் தான் ஒப்படைத்தார். அந்த வகையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவி வகித்த போது கட்சியில் பூசல் ஏற்பட்டது. திடீரென ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் செய்தார் ஓபிஎஸ். இதனை அடுத்து ஓபிஎஸ் அணி இபிஎஸ் அணி என கட்சி பிரிந்தது. பின்னர் மீண்டும் இணைந்தது. அதன் பின் தனி நபரானார் ஓபிஎஸ். அதிமுகவில் பொருளாளர், துணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் என பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.தற்போது அவர் திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.
ஓபிஎஸ் கடந்து வந்த பாதை,
- 1973இல் அதிமுகவில் இணைந்தார்.
- 1996-2021 பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்தார்
- 2001 பெரியகுளம் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்
- செப்டம்பர் 2001 ஜெயலலிதா அவர்கள் சிறை சென்றபோது தமிழகத்தின் 13 வது முதலமைச்சராக பதவி ஏற்றார்
- 2002-2006 வருவாய் துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தார்.
- 2006-2011 சட்டப் பிறவியின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்
- 2011-2014 நிதியமைச்சராக பொறுப்பேற்றிருந்தார்
- 2014-2015 ஜெயலலிதா சிறை சென்றபோது இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்தார்
- டிசம்பர் 2016 பிப்ரவரி 2017 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருந்தார்
- பிப்ரவரி 7ம் தேதி 2017ல் சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார்
- ஆகஸ்ட் 21ம் தேதி2017ல் எடப்பாடி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தனர்
- 2017-2021 துணை முதலமைச்சராக இருந்தார்
- ஜீலை 2022ல் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார்
- 2024 NDA கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார் ஓபிஎஸ் அதில் இரண்டாவது இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்























