மதுரையில் உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் - சு.வெங்கடேசன் கோரிக்கை !
மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை நகராட்சித் துறை அமைச்சர் மற்றும் நகராட்சி துறை தலைமைச் செயலர் ஆய்வு செய்திட வேண்டும்
சாலைகளை சீரமைக்க வேண்டும்
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வழியுறுத்தி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் கூறுகையில் "மதுரையில் கடந்த 10 நாட்களாக பெய்த மழை காரணமாக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது, சாலை சேதம் காரணமாக மக்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் சாலைகளை உடனடியாக சீரமைப்பதற்கு, போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை துவக்குவதற்கும் வடகிழக்கு பருவ மழை தீவிரத்தை கணக்கில் கொண்டு முன்னதாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக தயாராக வேண்டும்.
தீர்வும் காண வேண்டும்
தினசரி கோரிப்பாளையம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஊடகங்களில் நாம் பார்க்கின்றோம். மழை பெய்தால் தண்ணீர் தேங்கி இடுப்பு அளவிற்கு நிற்கின்றது அதற்கான மாற்று என்ன என்பதை உறுதிப்படுத்த வேண்டி உள்ளது. இது போன்ற பிரச்சனைகள் தேசிய நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மாநகராட்சிக்கு நிர்வாகம் ஆகியோர்களுக்கு நேரடியான தொடர்பு இருக்கின்றது.
ஏனென்றால் நகரத்திற்குள் தேசிய நெடுஞ்சாலைனுடைய சாலைகள் உள்ளது மாநகராட்சி அதில் பணி செய்து கொண்டிருக்கின்றது எனவே இது போன்ற சிக்கல்கள் இருப்பதால் அதற்கான தீர்வும் காண வேண்டி உள்ளது. எனவே இது போன்ற பிரச்னைகளை தீர்க்க மாவட்ட ஆட்சியரிடம் பேசி அதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஆய்வுக் கூட்டத்தை வார வாரம் நடத்திட வேண்டும்
அதேபோல் மதுரை பழங்காநத்தில் இருந்து திருநகர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் திட்டமிட்ட நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. அதையும் முறை படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கும் நாட்களில் இது போன்ற சிரமங்களை போக்கிட வேண்டும். தொடர்ச்சியாக இந்த காலகட்டங்களில் சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது, குறிப்பாக இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது.
இதற்கு பிரதான காரணமாக உள்ளது. சாலைகள் இவைகளை எல்லாம் கணக்கில் கொண்டு அடுத்த 10 நாட்களில் இந்த 34 சாலைகளின் பணிகளை முடிக்க வேண்டும், இதர துறைகள் சார்ந்த சாலைகள் தேசிய நெடுஞ்சாலை சார்ந்த சாலைகள் குறித்த தகவல்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்வதும். மேலும் இரண்டு பிரதான சாலைகளில் உள்ள பணிகளை உறுதிப்படுத்துவதற்கும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளோம்.
மழைக்காலத்தில் சாலை தொடர்பாக புகார் அளிக்க மாநகராட்சியில் 24 மணி நேரமும் இயங்ககூடிய தனி புகார் எண் வெளியீட வேண்டும் என்று கூறியுள்ளோம். ஒரு வாரத்திற்குள் அதை செய்வதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார், மேலும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் செப்பணிடுவது சம்பந்தமான ஆய்வுக் கூட்டத்தை வார வாரம் நடத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். மதுரை மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை நகராட்சித் துறை அமைச்சர் மற்றும் நகராட்சி துறை தலைமைச் செயலர் ஆய்வு செய்திட வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.