MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Rajya Sabha election : தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கு திமுக சார்பாக போட்டியிட்ட 4 பேரும், அதிமுக சார்பாக போட்டியிட்ட 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி திமுக சார்பாக 4 பேரும், அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்க முடியும். எனவே அதிமுக சார்பில் தம்பிதுரையும், கூட்டணிக் கட்சியான பாமக சார்பில் அன்புமணி ராமதாஸும் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதே போல திமுகவை பொறுத்தவரையில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டைண்டன் ரவீந்திரன் ஆகியோரும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தேமுதிக சார்பில் சுதீசும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
போட்டியின்றி தேர்வு
இதனையடுத்து ராஜ்யசபா தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டிருந்தது. சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மதியம் 3 மணியுடன் கால அவகாசம் முடிந்த நிலையில், 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சான்றிதழை பெற்றுக்கொண்ட ராஜ்யசபா உறுப்பினர்கள்
அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இதே போல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தேமுதிக எல்.கே. சுதிஷ் ஆகியோரும் சான்றிதழ்களை பெற்றனர். திருச்சியில் திமுக மாநாட்டில் திமுகவினர் கலந்து கொள்ள சென்றிருப்பதால் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் ஆகியோர் வருகிற 11ஆம் தேதி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























