Pugaar Petti: தாமதம் ஏற்படும் மேலூர் காய்கறி மார்கெட் கட்டுமானப் பணி... வியாபாரிகள், பொதுமக்கள் வேதனை !
மார்க்கெட் கட்டுமான பணிகள் தாமதம் ஏற்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் கக்கன் சிலை அருகில் தினசரி காய்கறி மார்கெட் இயங்கி வந்தது. இங்கு மேலூர் மற்றும் நகரைச் சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காய்கறி வாங்கிச் செல்வார்கள். இதனால் இட நெரிசல் ஏற்படும். மழை காலங்களில் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். இந்நிலையில், தினசரி சந்தையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 87 லட்சத்தில் 1.63 ஏக்கர் பரப்பளவில் தினசரி சந்தையும், 68 மளிகை கடைகள், 72 காய்கறி கடைகள், 18 மீன் கடைகள், 12 இறைச்சி கடைகள், 15 திறந்தவெளி கடைகள் என மொத்தம் 185 கடைகள் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்க்கெட் கட்டுமான பணிகள் தாமதம் ஏற்படுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காய்கறி வியாபாரிகள் சிலர் நம்மிடம்...," மேலூர் மார்கெட் தான் எங்கள் வாழ்வாதாரம். இதை வைத்து தான் பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்நிலையில் புதிய மார்கெட் கட்டுவதாக எங்களை வெளியேற்றினர். 8 மாதத்தில் பணிகள் முடிந்து வியாபாரம் துவங்கலாம் என உறுதி கொடுத்திருந்த நிலையில், தற்போது ஒரு வருடம் கடந்தும் பணிகள் பாதி தான் முடிந்துள்ளது. தற்காலிகமாக நாங்கள் சந்தப்பேட்டையில் காய்கறி கடை போட்டிருக்கோம். பாதிப்பேர் பழைய மார்கெட் அருகில் சாலையில் கடை போட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டு இரண்டு இடங்களுக்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர். உழவர் சந்தையில் கடை போட்டுள்ள நாங்கள் வியாபாரம் இல்லாமல் மிகுந்த சீரமத்திற்கு ஆளாகியுள்ளோம்" என வேதனை தெரிவித்தனர்.
கட்டிடத்தின் பொறியாளர் பட்டுராஜன் நம்மிடம்...," மார்கெட் கட்டிட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தடையும்" என தெரிவித்தார்.
மேலும் நகர் மன்றத்தலைவர் முகமது யாசின் தெரிவிக்கையில்...," புதிய மார்க்கெட் கட்டுவதற்காக வியாபாரிகள் வெளியேற சொன்ன போது சிலர் போரட்டத்தில் இறங்கினர். தொடர்ந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பணிகள் ஆரம்பித்தது. அப்போது அங்கு சில மரங்கள் அகற்றவேண்டியிருந்தது. இதற்கு துறை சார்ந்து அனுமதிகள் பெற வேண்டிருந்தது. இப்படி பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் மார்கெட் கட்டுமானப் பணி சில மாதங்களில் நிறைவடைந்துவிடும்" என்றார்.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் உங்கள் பகுதி பிரச்சனைகள் குறித்து அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்