(Source: ECI/ABP News/ABP Majha)
மதுரை ; 'அப்போ மயில்கள், இப்போ மாடுகள்’ - வாயில்லா ஜீவன்கள் மீது ஆசிட் வீச்சு!
’நெஞ்சில் துளியும் ஈரம் இல்லாத நபர்கள் தான் இது போன்ற செயல்களை செய்திருக்க முடியும். எனவே குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - என்றனர்.
டிஜிட்டல் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருக்கும் நாம், சக உயிர்கள் சந்திக்கும் துயரங்களை ‘அய்யோ பாவம்’ என்ற ஒற்றை வார்த்தையுடன் கடந்து செல்கிறோம். மனிதநேயம், பிற உயிர்கள் மீதான நேசம் போன்ற நிகழ்வுகள் மிக அரிதாக அங்கொன்றும், இங்கொன்றுமாக மட்டுமே துளிர்கிறது. பிற உயிர்கள் மீது பாசத்தை கொட்டவில்லை என்றாலும் கொடூரங்களை உதிர்ப்பது என்ன மாதிரியான மன நிலையோ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மதுரையில் பசுமாடுகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் ஒன்று நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் மீதான வன்முறை தாக்குதல் என்பது தொடர்ந்து அதிகரித்துள்ளது. மதுரை நகர் பகுதியில் இருந்து அழகர்கோயில் செல்லும் சாலையில் தல்லாகுளம், கே.புதூர், சூர்யா நகர்பகுதிகளும் மற்றும் ஆனையூர், கண்ணனேந்தல், அய்யர்பங்களா என நகர் சுற்றுவட்டார பகுதிகளிலும் சாலையில் செல்லும் பசு மாடுகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் மீது இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அதிக திறன் கொண்ட ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் போன்ற திரவங்களை ஊற்றுவதால், மாடுகள் படுகாயமடைந்து சாலையில் ரத்த காயங்களுடன் சுற்றித்திரியும் அவல நிலை நெஞ்சை உடைக்கிறது.
மேலும் செய்திகள் படிக்க -'' செந்தில் பாலாஜியின் அணில் பேச்சால் நான் தப்பித்தேன்’’ - செல்லூர் ராஜூ நிம்மதி !
இந்த சம்பவம் தொடர்பாக விலங்கு நல ஆர்வலர்கள் கால்நடைகளை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தின் சாலையோரம் உள்ள தெரு நாய்களுக்கும் விஷம் வைத்துக் கொள்ளும் சம்பவமும் அதிகரித்துள்ளது, கடந்த 2 மாதத்தில் பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை அந்த பகுதி உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறி்த்து சமூக ஆர்வலர்கள் சிலர்,” மதுரை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்கனவே சூர்யா நகர்பகுதியில் கிட்டதட்ட 43 மயில்கள் மர்மமான முறையில் இறந்தன. அதன் விசாரணை என்ன ஆனதென்று தெரியவில்லை. இந்நிலையில் மாடுகள் மீது ஆசிட் வீசும் கொடுஞ்செயல் அரங்கேறுகின்றன. நெஞ்சில் துளியும் ஈரம் இல்லாத நபர்கள் செய்த செயல் தான் இது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் கொடும்பாவிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த செய்தியை படிக்க மிஸ் பண்ணாதீங்க - viruthunagar Update: ‛ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு... அப்பா அம்மா’