viruthunagar Update: ‛ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு... அப்பா அம்மா’
விருதுநகர் அருகே கிராமத்தில் ஒரே ஒரு தம்பதி மட்டுமே வசித்து வருவதும், ஒட்டு மொத்த கிராமமும் காலி செய்து வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்ததும் தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ளது குச்சம்பட்டி கிராமம். 35 ஆண்டுகளுக்கு முன் செல்வம் கொழித்த பூமியாக இருந்துள்ளது. தற்போது வறட்சியால் வாடுவதால் இங்கு குடியிருந்த சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளி மாவட்டங்களுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தில் சுபாஷ்சந்திர போஸ் - ராஜீ தம்பதியினர் மட்டும் வசித்து வருகின்றனர்.
யாரும் இல்லாத ஊரில் வயதான தம்பது வசித்து வந்தது ஊடகம் மூலம் வெளியே தெரியவந்தது. இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகனாத ரெட்டி தகவல் தெரிந்ததும், குச்சம்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் வயதான சுபாஷ்சந்திர போஸ் - ராஜீ தம்பதியை சந்தித்து பேசினார். சித்த மருத்துவம் பார்த்துவரும் சுபாசந்திர போஸ் ”பக்கத்து கிராமங்களில் இருந்து வரும் நபர்களுக்கு, பாம்பு கடி, பூச்சிகடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்து கொடுக்க வேண்டும் என்பதால் நாங்கள் இங்கேயே தங்கியுள்ளோம்” என தெரிவித்தது ஆட்சியரை நெகிழ்ச்சியடைய செய்தது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வயதான தம்பதியின் செயலை பாராட்டி அவர்களின் நிலை அறிந்து பசுமை வீடுகள் கட்ட ஏற்பாடு செய்துள்ளார். ஆள் இல்லாத கிராமத்தில் வசித்த தம்பதியினரை ஆட்சியர் காண சென்றது பலரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இந்நிலையில் இதே போல் மதுரை மாவட்டத்தில் ஆட்கள் அதிகம் இல்லாத கொட்டகுளம் கிராமத்திற்கு சென்றோம்.
மதுரை மாநகரில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ளது சிட்டம்பட்டி. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது கொட்டகுளம் கிராமம். ஆனால் அந்தக் கிராமத்தின் பெயர் அவ்வழியாகச் சென்றுவரும் சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. கொட்டகுளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆங்காங்கே மழைப் பொழிவில் கொளுஞ்சியின் வாசனை அழகாய் மணத்தது. அணில்கள் பல ஓடி, ஆடியது கண்களுக்கு விருந்து.
ஊரின் முகப்பில் இருந்த அரச மரம் கடலில் ஏற்படுத்தும் அலைகளின் சந்தம் போல் சலசலத்தது. அரச மரத்து குளு, குளு நிழலில் இருந்த விநாயகர் கோயில் அமைதியை கொடுத்தது. ஆங்காங்கே கட்டிக் கிடந்த ஆடு, மாடுகள் தன்னிலை மறந்து அசை போட்டுக் கொண்டிருந்தது. குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூட ஆள் இல்லாமல் கொட்டகுளம் இருந்திடுமோ என்று ஐயத்தோடு சென்ற நமக்கு குசேலன் என்பவர் தண்ணீர் கொடுத்தது நம் மனதில் செல்வந்தராக தென்பட வைத்தது. பழமையான காரைக்குடி ஸ்டைலில் வீடுகளைக் காண முடிந்தது. அதில் பலவும் இடிந்து மண்ணோடு மண்ணாகப் போய்விட்டன. ஆனால் இருக்கும் வீடுகளில் கூட ஆட்கள் இல்லை. நீண்ட நேரம் கடந்தும் சிலரை மட்டுமே சந்திக்க முடிந்தது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மிகவும் செழிப்பாக இருந்த கிராமம். தற்போது கருவேல மரங்களால் காம்பவுண்டு சுவர் கட்டியது போல் உள்ளது. ஒரு, சில குடும்பம் மட்டும் வசிக்கின்றனர். ஆரம்பத்தில் விவசாய பணிகளை மேற்கொள்பவர்கள் நேரத்தையும் பணியையும் சுருக்க இங்கேயே கொட்டகைகள் அமைத்து வசித்து வந்துள்ளனர். அதனாலே இந்தக் கிராமத்திற்கு கொட்டகுளம் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. விவசாயத்தில் இக் கிராமத்தினர் சக்கைபோடு போட்டுள்ளனர். அதனால் இந்த ஊருக்கு விவாயத்துக்கு வண்டிகட்டி வந்து வெளியூர் நபர்கள் வேலை செய்துள்ளனர். இன்றளவில் வாகனங்கள் பெருத்த காலத்தில் இந்த ஊர் பக்கம் ஒரு பஸ்கூட வந்ததில்லையாம். அதனால இங்க இருந்த மிச்ச குடும்பங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக காலி செய்துவிட்டார்கள்.
கொட்டகுளம் கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர் நம்மிடம்....," அழகாமலையான், தீத்தக்கரை ராக்கு துணையால இன்னைக்கும் நான் திடமா இருக்கே தம்பி. அப்பயெல்லாம் வயக்காட்டு வேலை தான். முள்ளு, மொடளுக பெறக்கியாச்சும் கஞ்சி குடுச்சுருவோம். இப்பயெல்லாம் அப்படி இருக்க முடியிறதில்ல காசு, பணத்துக்கு ஆசைப்பட்டு பேயா அழையுறாங்க. கொட்டகுளம் சுத்தி வெள்ளாம செழிக்கும் மூணு போகம் கூட சொல்லி அடிப்பாங்க. பக்கத்துல இருக்க கொடிக்குளம் சம்சாரிக தான் இங்க வந்து இருந்தாங்க. வெவசாயம் பண்ணிட்டு வீடு திரும்ப லேட்டாகும்னு இங்கையே தங்க ஆரம்பிச்சுட்டாங்க. வெவசாயம் நல்லா கருத்தா பாத்ததால நல்ல லாவம் கெடச்சுச்சு. காரைவீடு கட்டி மச்சுல நெல்லு வச்சுக்கிட்டாங்க.
அதுவே காலப்போக்குல மழை, தண்ணி இல்லாம போகவும் ஊரே அரண்டு போச்சு. சுத்துபட்டுள குவாரியெல்லாம் வந்ததால ஆத்துல ஒழுங்கா தண்ணிவரல. அதனால குறுக்கு சால் ஓட்டுனது மாதிரி வெவசாயம் கெட்டுப்போச்சு. 30, நாப்பது வீடுக இருந்த இடத்துல பாதியா குறைஞ்சு போச்சு ஒன்னு ரெண்டு வீட்டுல தான் ஆளுகளும் இருக்காங்க. நல்ல நாள், பெரிய நாளுக்கு மட்டும் ஆளுக வந்து சாமி கும்புட்டுட்டு போறாங்க" என்று சொல்லிக் கொண்டிருந்தவர் ஹே...,ஹே....னு தன் ஆடுகளை பத்திச் சென்றார்.
விவசாயத்திற்காக உருவான கிராமம் தற்போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத திகில் கிராமமாக இருக்கிறது. கொட்டகுளம் கிராமத்தில் வசித்த பொதுமக்கள் பலரும் தற்போது ஊரில் இல்லை என்றாலும் தங்களது ஓட்டு உரிமையை இங்கே தான் வைத்துள்ளனர். மின்சார வசதி, குடிநீர் வசதிகள் இருந்தாலும் போக்குவரத்திற்கு பேருந்து இல்லை என்பதுதான் இப்பகுதி மக்களின் குறையாக உள்ளது.
கொட்டகுளம் மார்க்கமாக தனியார் மினிபஸ்கள் விட்டால் கூட இப்பகுதியில் உள்ள ஐந்து, ஆறு கிராமங்களுக்கு உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதை மிஸ் பண்ணாதீங்க பாஸ் -சிட்னியா மாறியதா மதுரை? சிந்திய சட்னியாக இருப்பதாக குற்றச்சாட்டு!