மேலும் அறிய
மதுரையில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தில் தானியங்களை அரைப்பதற்கான அமைப்பு கண்டுபிடிப்பு
மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் செஞ்சாந்து ஓவியத்தின் எதிரிலுள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்புப் பள்ளங்கள் உள்ளன.

தொல்லியல் ஆய்வு
மதுரை மாவட்டம், திருமங்கலம் தே. கல்லுப்பட்டி அருகே கோபால்சாமி மலைப் பகுதியில் சுமார் 8000 ஆண்டுகள் பழமையான, புதிய கற்காலத்தின் அரவைத் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தும், பாறையில் உருவாக்கப்பட்ட அமைப்பினை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கோபால்சாமி மலை அருகில் பழமையான தொல்லியல் தடயங்கள் இருப்பதாக நூர்சாகிபுரம் சு.சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், அவருடன் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் து.மனோஜ், மு.பிரவீனா ஆகியோர் அப்பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: புதிய கற்காலமும் வாழ்வியல் மாற்றமும் புதிய அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டில் நிலவிய புதிய கற்காலம் கி.மு.6000 முதல் கி.மு.2200 வரையிலானது என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய புதிய கற்காலத்தில் தான் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மட்பாண்டங்கள், நிரந்தரக் குடியிருப்புகள், தானியங்களை இடித்து அரைத்துப் பயன்படுத்துதல், தெய்வ வழிபாடு, வழுவழுப்பான கற்கருவிகள் ஆகியவை தோற்றம் பெற்றன. இந்நிலையில் கோபால்சாமி மலையின் வடக்குப் பகுதியில் கல்லாலான வட்டச்சில்லு, அரைப்புக்கற்கள், சிவப்பு நிற பானை ஓடுகள், புதிய கற்கால கற்கோடரி, இரும்புக் கசடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இங்குள்ள பாறைகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வழுவழுப்பாகத் தேய்த்த சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள், அம்மி போன்ற அமைப்பும் உள்ளன. இவை அரைப்புக் கற்களைக் கொண்டு தானியங்களை இடிக்கவும், அரைக்கவும், கொட்டைகளை உடைக்கவும் பயன்படுத்திய இடங்களாக இருக்கலாம். இவை
கற்கருவிகளைத் தேய்த்தபோது உண்டான பள்ளங்கள் இல்லை. அவை நீளமானதாக இருக்கும். இவை அவ்வாறு இல்லை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் தேய்க்குமிடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலேயே உள்ளன. இங்கு ஆறு, சுனை எதுவுமில்லை.

புதிய கற்காலத்தில் மனிதனிடம் ஏற்பட்ட முக்கியமான நாகரிக வளர்ச்சி தானியங்களை இடித்து, அரைத்துப் பயன்படுத்தியதும், சமைத்த உணவுகளை உண்ணத் தொடங்கியதும் தான். இது அவனது வாழ்க்கை முறையை மாற்றி, பல் உள்ளிட்ட உடல் பிரச்னைகளுக்குக் காரணமானது. பையம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் புதிய கற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த அரைப்புக்கல், திருகைக்கல், குழவி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் பாறையில் ஒரு வரிசைக்கு 6 என 3 வரிசைகளில் அமைந்த 18 குழிகள் கொண்ட பல்லாங்குழி அமைப்பும், அதன் அருகில் சதுர வடிவில் அமைந்த படம் போன்ற ஒரு பாறைச் செதுக்கலும் இங்கு உள்ளன. தமிழ்நாட்டில் புதிய கற்காலப் பண்பாட்டின் தொடர்ச்சியாக இரும்புக்காலம் இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பாறையின் வடக்கில் 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தனித்தனியாகக் காணப்படுகின்றன. இவை இரும்புக்காலத்தைச் சேர்ந்த சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும். இப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய கற்கால, இரும்புக்காலத் தடயங்கள் உள்ளன.

தென் தமிழ்நாட்டில் புதிய கற்காலத்தின் தடயங்கள் பெரிய அளவில் கிடைக்காத நிலையில் இங்கிருந்து 10 கி.மீ தொலைவில் தே.கல்லுப்பட்டியில் இத்தடயங்களை மத்திய தொல்லியல் துறை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளது. மதுரை முத்துப்பட்டி பெருமாள்மலையில் செஞ்சாந்து ஓவியத்தின் எதிரிலுள்ள பாறையிலும் இதுபோன்ற அரைப்புப் பள்ளங்கள் உள்ளன. இந்த இடங்களில் அகழாய்வு செய்து தென் தமிழ்நாட்டில் நிலவிய புதிய கற்காலப் பண்பாட்டை அரசு வெளிக்கொணரவேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சென்னை
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement