Karthikeyan IAS Allegations | இருக்கையில் அமரும் முன்பே மாற்றப்பட்ட பதவி - முறைகேடு புகார்கள்தான் காரணமா?
740 கோடி ரூபாய் ஊழல் - கார்த்திகேயன் மீது விசாரணை தேவை என 2018-ஆம் ஆண்டு மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்ட இரண்டே நாட்களில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன், தீரஜ் குமார் ஆகியோரின் பதவிகளை மாற்றி மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு
கடந்த செவ்வாய் கிழமை (மே 25-ஆம் தேதி) தமிழக அரசு 21 ஐஏஎஸ் அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றி அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறிய துறைமுகங்களின் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். தீரஜ் குமார் உயர்கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து பணிகள் மேற்கொள்ள துவங்கும் முன்பே மீண்டும் வியாழன் ( மே 27-ஆம் தேதி ) அன்று பொறுப்புகளை மாற்றி மறு உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.
கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் உயர்கல்வி துறை செயலாளராகவும், அதே நேரம் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயன் மீது முன்வைக்கப்படும் முறைகேடு புகார்கள்தான் இந்த உடனடி மாற்றத்திற்கு காரணமாக அமைந்திருக்குமோ என்ற கருத்து நிலவ தொடங்கியிருக்கிறது.
அப்படி என்ன முறைகேடு புகார்கள் - யார் இந்த கார்த்திகேயன் ?
தற்போது தமிழக முதல்வராக இருக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 2018-ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சென்னை மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார், அப்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தவர்தான் கார்த்திகேயன். சென்னை மாநகராட்சி ஆணையராக அவர் பணியாற்றிய காலத்தில் வெளிப்படையான நிர்வாகம் இல்லை, முறைகேடுகள் நடைபெறுகிறது என்று அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். குறிப்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் "மழை நீர் வடிகால் குழாய் அமைப்பதில், சென்னையில் சாலைகள் அமைப்பதில் டெண்டர் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கே டெண்டர் மறைமுகமாக கொடுக்கப்படுகிறது" என குறிப்பிட்டார்.
மேலும் இந்த டெண்டர் ஒதுக்கீட்டு விவகாரத்தில் 740 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளது என்றார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளையும் பட்டியலிட்ட ஸ்டாலின், அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்பி வேலுமணி மீதும், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் மீதும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் திமுக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் என்றார். இந்நிலையில் தான் மே 25ம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மீண்டும் ஐ.ஏ.எஸ் அதிகாரி கார்த்திகேயனுக்கு நெடுஞ்சாலை துறை போன்ற மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதிற்கு பலர் தங்கள் புருவத்தை உயர்த்தினர்.
மேலும் தன்னார்வ அமைப்புகள் சில (அறப்போர் இயக்கம் ) கார்த்திகேயனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை செயலாளர் பொறுப்பிலிருந்து, உயர்கல்வி துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். உண்மையில் முறைகேடு புகார் இருப்பின், பொறுப்புகளை மாற்றினால் அது சரி ஆகிவிடுமா ? விசாரித்து நடவடிக்கை எடுப்பது அல்லவா சரியான முடிவாக இருக்க முடியும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது