West Bengal: மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி.. மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு..!
மால்டாவில் உள்ள பாங்கிடோலா உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் பள்ளி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மின்னல் தாக்கியதில் 9 கால்நடைகளும் உயிரிழந்ததாக மால்டா மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
கையாசாக் பகுதியில் இந்த மின்னலால் 6 பேரும் பழைய மால்டாவில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நீதிபது நிதின் சிங்கானியா கூறுகையில், “ மால்டாவைத் தாக்கிய பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் காரணமாக 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கிருஷ்ணோ சௌத்ரி (65), உம்மே குல்சும் (6), டெபோஸ்ரீ மண்டல் (27), சோமித் மண்டல் (10), நஜ்ருல் எஸ்கே (32), ராபிசன் பீபி (54), மற்றும் ஈசா சர்க்கார் (8) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மொத்தம் 9 கால்நடைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மால்டாவில் உள்ள பாங்கிடோலா உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் பள்ளி நேரத்தில் மின்னல் தாக்கியதில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், காயமடைந்த மாணவர்கள் பாங்கிடோலா கிராமப்புற மருத்துவமனை மற்றும் மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆதரவுகள் வழங்கப்பட்டு வருவதாக நிதின் சிங்கானியா தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமான முதல் கடுமையான மழை வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மேற்கு வங்க வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.