(Source: ECI/ABP News/ABP Majha)
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா? இதுதான் உங்க தேச பக்தியா? - சரமாரியாக சாடிய உச்ச நீதிமன்றம்!
பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, 2008 மும்பை தாக்குதலை தொடர்ந்து இரு நாட்டு உறவில் உச்சக்கட்ட விரிசலை ஏற்பட்டது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரம் பிரச்னையை மேலும் பெருதாக்கியது.
இயல்பான பேச்சுவார்த்தை கூட தடைப்பட்டது. இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரு தரப்பு தொடர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடக்கும் ஐசிசி தொடர்களில் கூட இந்திய அணி விளையாட மறுத்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துவிட்டனர்.
இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடையா?
இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு, விசாரணைக்கு எடுத்து கொண்டது.
அப்போது, மனுதாரர் மீது காட்டமான விமர்சனத்தை முன்வைத்த நீதிபதிகள், "இந்த வழக்கை மேல்முறையீடு செய்திருக்க கூடாது. குறுகிய மனப்பான்மையோட இருக்க கூடாது" என தெரிவித்தார்கள். மனுதாரருக்கு எதிராக உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்தை திரும்ப பெற விடுத்த கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சினிமா நட்சத்திரங்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோரை பணியமர்த்த இந்தியர்களுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து:
இந்த வழக்கை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம், "கலாச்சார நல்லிணக்கம், ஒற்றுமை, அமைதியை மேம்படுத்துவதில் மனுதாரரின் கோரிக்கை ஒரு பிற்போக்கான நடவடிக்கையாக இருக்கும். அதில் எந்த நியாயமும் இல்லை. தேசபக்தராக இருப்பதற்கு, வெளிநாட்டில் இருந்து குறிப்பாக அண்டை நாட்டிலிருந்து வருபவர்களுக்கு விரோதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தன்னலமற்ற, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருப்பவரே ஒரு உண்மையான தேசபக்தர். நல்ல உள்ளம் இல்லாதவரால் அப்படி இருக்க முடியாது. நல்ல உள்ளம் கொண்ட ஒருவர், நாட்டிற்குள்ளும் எல்லையிலும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் வரவேற்பவராக இருக்க வேண்டும்.
கலை, இசை, விளையாட்டு, நடனம் ஆகியவை தேசம், கலாச்சாரம், நாடுகளை கடந்து அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நாடுகளுக்கிடையே கொண்டு வருபவையாக இருக்க வேண்டும்" என தெரிவித்தது.