Kerala Cong MP | திருவனந்தபுரம் பெண் மேயரின் அழகை வர்ணித்த காங்கிரஸ் எம்பி.. வழக்குப்பதிவு!
கேரளாவில் பெண் மேயரின் அழகை வர்ணித்து பேசிய காங்கிரஸ் எம்பி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
கடந்த ஆண்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பெண் கேரளாவின் ஆர்யா ராஜேந்திரன்.மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 21 வயதேயான ஆர்யா கேரளாவின் மிகப்பெரிய நகராட்சியான திருவனந்த புரத்தின் மேயராக பொறுப்பேற்று அசத்தினார். இந்திய மாணவர் கூட்டமைப்பின் அலுவலகப் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த அவர், மேயராக பொறுப்பேற்றூ அனைவரையும் கவனிக்க வைத்தார். இளம் மேயராக பொறுப்பேற்ற அவர் அதற்கு பின்னும் தன்னுடைய கணீர் பேச்சால் அனைவரையும் கவனிக்க வைத்தார். அனுபவம் இல்லாத சிறுபிள்ளை என விமர்சித்த பலருக்கும், நான் மேயராகி இருக்கிறேன் என்றால் எனக்கு எப்படி வேலை பார்க்க வேண்டுமென்பதும் தெரியும்.
பக்குவளத்தை அளக்க இங்கு யாரும் வரவேண்டாம் என வெடித்துச் சிதறி எதிர்தரப்பை கப்சிப் ஆக்கினார். இந்நிலையில் அவர் குறித்த காங்கிரஸ் எம்பியின் விமர்சனத்தால் மீண்டும் கேரளாவில் எதிரொலிக்கிறது ஆர்யாவின் பெயர். திருவனந்தபுரம் மேயர் ஆர்யா குறித்து பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மக்களவையின் எம்பியுமான கே முரளிதரன், 'மேயர் பார்க்க அழகாகத் தான் இருக்கிறார்.
ஆனால் அவரிடம் இருந்து வரும் வார்த்தைகள் கொடுங்களூர் பரணி பாடல்களை விட மோசமாக இருக்கிறது என்றார். கொடுங்களூர் பரணி பாடல்கள் என்பது கெட்ட வார்த்தைகள் அதிகம் கொண்ட பாடல்களாகும். அதனைக் குறிப்பிட்டு மேயரின் வார்த்தைகளை கொச்சைப்படுத்திய எம்பி மீது கண்டனங்கள் எழுந்தன. மேலும் ஒரு பெண் மேயரின் அழகை வர்ணித்து ஒரு எம்பி பேசுவதா என பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து ஆர்யாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் எம்பி மீது பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியிலான வார்த்தைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட சில வழக்குப் பிரிவுகளில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் மேயர் மீதான விமர்சனத்து தொடர்ந்து கண்டனங்கள் எழுந்ததால், யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் நோக்கில் நான் பேசவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்