Maharashtra Political Crisis: ராஜினாமா கடிதம் ரெடி! பதவி விலகத் தயார்.. அதிரடியாக பேசிய உத்தவ் தாக்கரே
ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியைச் சேர்ந்த 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குஜராத்திலுள்ள விடுதியில் தங்கியுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிரா சிவ சேனா கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நான் முதல்வராக நீடிக்கக்கூடாது என எம்.எம்.ஏ.க்கள் விரும்பினால் நான் ராஜினாமா செய்யத்தயார் என்றார். மேலும் பேசிய அவர், நான் ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்கிறேன். ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என்னை நேரில் சந்திக்க வேண்டும். என்னிடம் குறை இருந்தால் நேரடியாக என்னிடமே தெரிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு சூரத்தில் அமர்ந்திருக்க வேண்டிய அவசியமென்ன எனக் குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஏல்.ஏ-க்கள் சூரத்தில் தஞ்சம்:
சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் குஜராத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் எந்த கட்சிக்கு எவ்வளவு பலம் உள்ளது என்பது குறித்து காண்போம்.
அசாதாரண சூழலுக்கு முன்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில் 106 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பாண்மைக்கு 144 இடங்கள் தேவைப்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தன.
பெரும்பான்மை:
ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழந்த நிலையில், தற்போது 144 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவை. சிவசேனா கட்சியிலிருந்து 21 உறுப்பினர்கள் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது 34 பேர் உள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 131 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை
பாஜக முயற்சி:
இந்நிலையில் தமக்கு 135 பெரும்பான்மை இருப்பதாக பாஜக கூறி வருகிறது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட 2 இடங்கள அதிகம். இது 27 இடங்களை கொண்டுள்ள மற்றவை ஆதரித்தால் மட்டுமே சாத்தியம் . ஆனால் சிவசேனா கட்சியில் இருந்த 21 உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இது சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு மிக சிக்கலான காலமாக கருதப்படுகிறது.
பாஜக ஆட்சி அமைக்காது:
இந்நிலையில் பாஜக கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது, அவர்களால் சிலரை விலைக்கு வாங்கி அசாதாரண சூழலை மட்டுமே ஏற்படுத்த முடியும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்