CABINET: மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?.. பிரதமர் மோடியின் புதிய திட்டம்..
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் மீதிருந்த மக்களின் வெறுப்பு மற்றும் மோடியை முன்வைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி முன்னெடுத்த தீவிர பரப்புரையின் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை அமைத்தது. அதைதொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையின் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2019ம் ஆண்டு, பொதுத்தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில், 2024ம் ஆண்டு தேர்தலுக்காக பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பணிகளை தொடங்கியுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாஜகவும், இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
அமைச்சரவையில் மாற்றம்?
எதிர்க்கட்சிகள் மேம்போக்காக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், பாஜக மைக்ரோ அளவில் தீவிரம் காட்டி வருகிறது. மக்களை கவரும் விதமாக பல்வேறு முக்கிய நடவடிக்கைகளோடு அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை சமாதானப்படுத்துவது, கட்சி சற்று பலவீனமாக உள்ள மாநிலங்களை சேர்ந்த பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை கவரும் நடவடிக்கைகளையும் பாஜக செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது, விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்போது மாற்றம்?
2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தல் அதற்கு முன் நடைபெற உள்ள 10 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே அமைச்சரவை மாற்றப்படலாம், அதாவது ஜனவரி 15 முதல் 25ம் தேதிக்குள் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாருக்கு வாய்ப்பு?
அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் போது, தொகுதிப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற மற்றும் அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா மற்றும் வடழகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்தில் நடப்பாண்டில் தேர்தல் நடைபெற உள்ளதால், அம்மாநிலத்தில் இருந்து புதிய அமைச்சர்கள் தேர்ந்து எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 4 முதல் 5 எம்.பிக்கள் புதியதாக அமைச்சர் ஆகலாம் எனவும், குஜராத் மற்றும் தெலங்கானாவை சேர்ந்த சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைமையில் மாற்றம்?
அண்மையில் முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், செயல்படாத மேலும் சில அமைச்சரகளின் பதவிகள் பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவர்களுக்கு கட்சியில் அல்லது அரசின் நிறுவனங்களில் முக்கிய பணிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பாக ஜே.பி.நட்டா பாஜக தலைவராக தொடர்வது குறித்து, கட்சி உயர்மட்டக்குழுவினர் விரைந்து கூடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.