Bhim Army Chief Shot: பரபரப்பு..! சினிமா பாணியில், பீம் ஆர்மி தலைவர் மீது துப்பாக்கிச் சூடு.. காரில் விரட்டி வந்து சுட்ட கும்பல்
உத்தரபிரதேசத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூரில் உள்ள தேவ்பந்த் பகுதியில், பகுஜன் மிஷன் இயக்கம் தொடர்பான பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வீடு திரும்பும் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு:
சஹரன்பூரில் உள்ள தேவ்பந்த் பகுதியில், பகுஜன் மிஷன் இயக்கம் தொடர்பான பொது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சந்திரசேகர் ஆசாத் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சஹரன்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஹரியான பதிவெண் கொண்ட டொயாட்டோ ஃபார்ச்யூனர் காரில் வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுள்ளது. நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படும் நிலையில், குண்டு கார் கண்ணாடிகளை துளைத்து உள்ளே நுழைந்துள்ளன.
சந்திரசேகர் ஆசாத் காயம்:
உடனடியாக சுதாரித்த சந்திரசேகர் ஆசாத்தின் ஓட்டுனர் காரை யு-டர்ன் போட்டு திருப்பியுள்ளார். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த தாக்குதலில் சந்திரசேகர் ஆசாத்தின் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. காரில் பயணித்த சந்திரசேகரின் சகோதரர் உள்ளிடோருக்கு அதிருஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படவில்லை. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சந்திரசேகரை மீட்டு உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
#WATCH | "I don't remember well but my people identified them. Their car went towards Saharanpur. We took a U-Turn. Five of us, including my younger brother, were in the car when the incident occurred..," says Bhim Army leader and Aazad Samaj Party - Kanshi Ram chief, Chandra… pic.twitter.com/MLeVR8poaN
— ANI (@ANI) June 28, 2023
தாக்குதல் நடத்தியது யார்?
தாக்குதல் சம்பவம் தொடர்பாக பேசிய சந்திரசேகர் “ சம்பவம் தொடர்பாக எனக்கு முழுமையாக நினைவில் இல்லை. ஆனால் என்னுடன் இருந்தவர்கள் தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் கண்டுகொண்டனர். அவர்களின் கார் சஹரன்பூர் நோக்கி சென்றது. நாங்கள் U-டர்ன் எடுத்தோம். சம்பவம் நடந்தபோது எனது தம்பி உட்பட ஐந்து பேர் காரில் இருந்தோம்” என மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாக தெரிவித்தார்.
யார் இந்த சந்திரசேகர் ஆசாத்?
உத்தரபிரதேசத்தின் சஹரான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் ஆசாத. 38 வயதான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக பீம் ஆர்மி என்ற அமைப்பை தொடங்கினார். சமூக செயற்பாட்டாளராகவும் உள்ள இவர், ஆசாத் சமாஜ் கட்சி என்ற கட்சியின் தேசிய தலைவராகவும் இருக்கிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமினில் உள்ளார்.
சமூக வலைதளங்களில் கண்டனம்:
சந்திரசேகர் ஆசாத் மீதான தாக்குதல் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முக்கிய தலைவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.