4000 கிலோ மீட்டர்.... லடாக் வரை சிங்களாக சீறிப்பாய்ந்த சிங்கப்பெண்... குவியும் பாராட்டுகள்
4000 கிலோமீட்டர் சிங்களாக சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் லடாக் வரை பைக்கில் சென்றவருக்கு குவியும் பாராட்டுகள்
இன்றைய உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் சம அளவில் திறமைகளை வெளிப்படுத்தி சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் இருந்து இளம் பெண் ஒருவர் லடாக் வரை தனியாக 4000 கிலோமீட்டர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி பத்மா தம்பதியின் மகள் ஸ்வேதா (24). இவர், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி கணிதம் படித்து வரும் இவர் தையல் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
மேலும் பைக் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் பைக்கில் தொலைதூரம் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது கனவாக இருந்துள்ளது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி பெற்றோர் தடை விதித்துள்ளனர்.
பெண்கள் தனியாக செல்வது பாதுகாப்பு குறைபாடாக கருதுவதை முறியடிக்க வேண்டும். பெண்களால் தனியாக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள முடியும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பெற்றோரிடம் எடுத்துக் கூறியதன் பேரில் அவர் சம்மதம் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஓராண்டாக தனக்கு தெரிந்த டைலரிங் தொழில் மூலம் சிறுக சிறுக பணம் சேர்த்து 2.5 லட்சம் மதிப்பிலான டூவீலரை தனியார் வங்கி நிதி உதவியுடன் வாங்கியுள்ளார். அந்த வாகனத்திற்கு சாரா பொண்ணு என பெயர் சூட்டினார். அந்தப் பெயரை டூ வீலரில் ஸ்டிக்கர் மூலம் ஒட்டி அழகு படுத்தி உள்ளார். தொடர்ந்து தொலைதூர பயணத்திற்கு தன்னை மேம்படுத்திக்கொள்ள அவ்வப்போது 500 கிலோ மீட்டர் ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணங்களை மேற்கொண்டு சுமார் 10,000 km பைக் ஓட்டினார். அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு கடந்த 30ஆம் தேதி தனது பிறந்த நாளன்று சொந்த ஊரான பலகோட்டில் இருந்து சாகச பயணத்தை தொடங்கினார்.
அவரது இலக்கு இந்திய திருநாட்டின் கடைகோடி மலை சிகரமான லடாக் ஆகும் தொடர்ந்து பெய்த மழையை பொருட்படுத்தாமல் கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு பல்வேறு இடையூறுகளை தாண்டி நான் ஒன்றுக்கு சுமார் 350 கிலோமீட்டர் வரையிலும் பயணம் செய்தார். தொடர்ந்து கடந்த 13ஆம் தேதி அன்று லடாக் பாதையை சென்றடைந்து தனது லட்சியத்தை நிறைவேற்றியுள்ளார்.
இதுகுறித்து சுவேதா கூறும்போது:-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு டவுணில் வசித்து வருகிறோம் எனது தந்தை எலக்ட்ரீசியன் தாய் குடும்ப தலைவி ஒரு அக்கா மற்றும் ஒரு தம்பி உள்ளனர். எனது லடாக் வரை மோட்டார் பைக் சாகச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. இது குறித்து வீட்டில் தெரிவித்த போது முதலில் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை.
அவர்கள் மனதை மாற்றி எனது வலிக்கு கொண்டு வந்தேன் டைலரிங் தொழில் மூலம் சிறுக சிறுக பணம் சேமித்து ஒரு பைக் வாங்கினேன். அதன் மூலம் கடந்த 30ஆம் தேதி பாலக்கோட்டில் இருந்து எனது சாகச பயணத்தை தொடங்கினேன். 4000 கிலோமீட்டர் தொலைவிற்கு தனியாக சாகசம் பயணம் செய்தேன்.
இந்த பயணத்தின் வழியாக கிடைத்த அனுபவங்கள் மற்றும் சாலைவிதிகளை சரியாக கடைப்பிடித்தால் சாகச பயணம் எளிதாக இருக்கும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் சமூகத்திற்கு வழிகாட்டியாக இருப்பேன். எனது பயண அனுபவங்களை யூட்யூப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பல பாகங்களாக தொகுத்து வெளியிட உள்ளேன்.
இதன் மூலம் தனியாக சாகச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் பயனடைவர் இந்த அனுபவத்தின் மூலம் இனிவரும் காலங்களில் சிறுசிறு குழுவாக சாகச பயணம் மேற்கொள்ளும் பெண்களை ஒருங்கிணைத்து இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு பாதுகாப்பான பயணத்தையும் சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை ஓட்டுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன் என்றார்.
லடாக் வரை தனியாக சாகச பயணம் மேற்கொண்டதன் மூலம் தர்மபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள ஸ்வேதாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.