Crime: கோவையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு - இரண்டு பேர் கைது
சதீஷ்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
கோவையில் முன்பகை காரணமாக பாஜக நிர்வாகியை அரிவாள் வெட்டிய 2 நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளி அருகே உள்ள சீரநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். 28 வயதான இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் ஆர்.எஸ்.புரம் மண்டல இளைஞர் அணி செயலாளராகவும் சதீஷ்குமார் இருந்து வருகிறார். இதனிடையே இவருக்கும் இந்து மக்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான எரியீட்டி வேலு என்பவரின் மகன்களுக்கும் இடையே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதில் சதீஷ் அந்த இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் ஆர்.எஸ் புரம் லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள சதீஷ்குமாரின் அலுவலகத்திற்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இரண்டு பேர் கைது
இதில் இரண்டு கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சதீஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.எஸ். புரம் காவல் நிலைய காவல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின் பேரில் எரியீட்டி வேலுவை காவல் நிலையம் அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் எரிய்யூட்டி வேலு மற்றும் சரவணன் ஆகிய இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.