’லலிதா ஜீவல்லரி’ திருட்டு பாணியில் டாஸ்மாக் கடை சுவற்றில் துளையிட்டு கொள்ளை
டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கடப்பாறையால் இடித்து துளையிட்டுள்ளனர். பின்னர் உள்ளே சென்று மதுபான பாட்டில்களை திருடி உள்ளனர்.
கோவை அருகே டாஸ்மாக் மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு ஒன்றரை இலட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், மது பிரியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பல இடங்களில் அதிக விலை கொடுத்து மதுபானங்களை வாங்கி குடிக்கவும் தயாராக உள்ளனர். குடிப்பதற்காகவும், அதிக விலைக்கு விற்று இலாபம் பார்ப்பதற்காகவும், டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபானங்கள் திருடப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்திலும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடையின் பின்புற சுவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கடப்பாறையால் இடித்து துளையிட்டுள்ளனர். பின்னர் உள்ளே சென்று மதுபான பாட்டில்களை திருடி உள்ளனர். இன்று காலை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடை உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து, சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடை ஊழியருக்கு தெரியப்படுத்தினர். கடை ஊழியர்கள் வந்து கடையை திறந்து பார்த்த போது, 96 பீர் பாட்டில்கள் மற்றும் 800 குவாட்டர் பாட்டில்கள் உள்ளிட்ட மதுபானங்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ஒன்றரை லட்சத்திற்கும் மேல் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல கோவை மாவட்ட தனிப்பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, தனிப்படை காவல் துறையினர் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பாரதி நகரில் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அச்சோதனையின்போது வந்த லாரியை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். அதில் ரகசியமாக பேப்பர் லோடின் உள்ளே மறைத்து மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 277.89 லிட்டர் அளவுடைய 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர் வாகனத்தின் ஓட்டுநர் பாபு மற்றும் உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.