Local Body Election |கோவை மாநகராட்சியில் களமிறங்கியுள்ள பணக்கார வேட்பாளர்கள் - மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1130 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் பணக்கார வேட்பாளர்கள் பிரமாண பத்திரத்தில் காட்டியுள்ள சொத்து மதிப்பு விபரம் இதோ...
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 4,572 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட 1130 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் திமுக 74 வார்டுகளில் நேரடியாக போட்டியிடுகிறது. மீதமுள்ள 26 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 வார்டுகளும், மதிமுகவிற்கு 3 வார்டுகளும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 93 வார்டுகளில் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு வார்டில் போட்டியிடுகிறது.
பணக்கார அதிமுக வேட்பாளர்
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதில் அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்படும் சர்மிளா சந்திரசேகர் முதலிடத்தில் உள்ளார். 38 வது வார்டில் போட்டியிடும் அதிமுக மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணி இணைச்செயலாளராக உள்ள சர்மிளா சந்திரசேகருக்கு 38. 75 கோடிக்கு சொத்து இருப்பதாக பிரமண பத்திரத்தில் காட்டியுள்ளார். அதில் 1 கோடியே 97 இலட்சத்து 78 ஆயிரத்து 787 ரூபாய் அசையும் சொத்துக்கள் தன்னிடம் இருப்பதாகவும், அவரது கணவர் சந்திரசேகரிடம் 19 கோடியே 57 ஆயிரத்து 256 ரூபாய் அசையும் சொத்து உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தனது சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பு 1 கோடியே 32 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என்றும், தனது கணவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தின் மதிப்பு 13 கோடியே 52 இலட்ச ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். 3 கோடியே 6 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு பரம்பரை சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சர்மிளாவிடம் மொத்தம் 6 கோடியே 36 இலட்சத்து 63 ஆயிரத்து 787 ரூபாய் எனவும், சந்திரசேகரிடம் மொத்தம் 32 கோடியே 52 இலட்சத்து 57 ஆயிரத்து 256 ரூபாய் என மொத்தம் 38 கோடியே 89 இலட்சத்து 21 ஆயிரத்து 33 ரூபாய் சொத்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். இதேபோல 3 கோடியே 70 இலட்சத்திற்கு கூட்டு குடும்ப சொத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பணக்கார திமுக வேட்பாளர்கள்
கோவை மாநகராட்சியில் 81 வது வார்டில் திமுக சார்பில் எம்.மனோகரன் போட்டியிடுகிறார். இவரது மொத்த சொத்த மதிப்பு 37 கோடியே 44 இலட்சத்து 2 ஆயிரத்து 350 ரூபாய் என பிரமாண பத்திரத்தில் தெரிவித்து உள்ளார். மனோகரன் பெயரில் 21 கோடியே 36 இலட்சத்து 97 ஆயிரத்து 350 ரூபாயும், அவரது மனைவி பெயரில் 16 கோடியே 7 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாயும் சொத்துகள் உள்ளது. இதேபோல 22 வது வார்டில் போட்டியிடும் கோவை பாபு செல்வகுமாருக்கு மொத்தம் 7 கோடியே 38 இலட்சத்து 4 ஆயிரத்து 749 ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும், 52 வது வார்டில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்விக்கு மொத்தம் 4 கோடியே 32 இலட்சத்து 4 ஆயிரத்து 566 ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.