Rahul Gandhi To Wayanad : கோவை வருகிறார் ராகுல் காந்தி ; தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக வயநாடு செல்கிறார்..
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நாளை காலை ராகுல்காந்தி வர உள்ளார். பின்னர் கார் மூலம் நீலகிரி வழியாக கேரள மாநிலம் வயநாடுவிற்கு அவர் செல்ல உள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது கர்நாடகாவில் மோடி எனும் சமூகத்தின் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சாட்டினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அவரது அரசு இல்லத்தில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றமும் ராகுல் காந்தியின் கோரிக்கையை கடந்த 7-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இறுதியாக உச்சநீதிமன்றத்தை நாடியபோதுதான், அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை, கடந்த 5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்த நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக, மக்களவை செயலகம் அறிவித்தது. இதனால், 136 நாட்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி. ஆனார் ராகுல் காந்தி. மக்களவை செயலகத்தின் அறிவிப்பை தொடர்ந்து ராகுல் காந்தி அடுத்தடுத்து அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
முன்னதாக அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் என இருந்த தனது டிவிட்டர் பயோவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என மாற்றினார். இந்நிலையில், அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதால், தனது டிவிட்டர் பயோவி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத தீர்மானம் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல்காந்தி, வயநாடு தொகுதிக்கு நாளை செல்ல உள்ளார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு நாளை காலை ராகுல்காந்தி வர உள்ளார். பின்னர் கார் மூலம் நீலகிரி வழியாக கேரள மாநிலம் வயநாடுவிற்கு அவர் செல்ல உள்ளார். இதனிடையே உதகையில் தன்னார்வ அமைப்பின் சார்பில் நடக்கும் நிகழ்வில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். பின்னர் வயநாடு செல்லும் வழியில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை ராகுல் காந்தி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
பொம்மன், பெள்ளி தம்பதியினரை பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர் ஏற்கெனவே நேரில் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
கோவையில் காட்டு யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க தனிப்பாதை ; விபத்துகளை தடுக்க நடவடிக்கை!