கோவையில் காட்டு யானைகள் ரயில் தண்டவாளத்தை கடக்க தனிப்பாதை ; விபத்துகளை தடுக்க நடவடிக்கை!
மதுக்கரையில் இருந்து வாளையார் வரை வனப்பகுதி வழியாக இரண்டு இரயில் பாதைகளில், கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை நடந்த ரயில் விபத்துகளில் மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளன.
தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை வனப்பகுதி வழியாக இரண்டு இரயில் பாதைகள் செல்கின்றன. இதில் முதல் இரயில் பாதை 17 கி.மீ. தொலைவும், இரண்டாவது இரயில் பாதை 23 கி.மீ. தொலைவும் கொண்டது. இப்பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதேபோல கேரள மாநிலத்திற்குள் வாளையார் முதல் பாலக்காடு வரையிலான இரயில் பாதையிலும் அவ்வப்போது இரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த 15 ஆண்டுகளில் 6 முறை யானைகள் ரயில் விபத்துகளில் சிக்கியுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தம் 11 காட்டு யானைகள் உயிரிழந்து உள்ளன.
இதனால் காட்டு யானைகள் இரயில் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க இரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இரயில் பாதையில் வேகமாக இரயிலை ஒட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இரவு நேரங்களில் இரயில்களை வேகமாக இயக்கி வருவதால் இந்த விபத்துகள் தொடர்ந்து வருகிறது. இதனிடையே யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யானை வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானைகள் அடிக்கடி ரயில் பாதையை கடக்கும் இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனைத்தொடர்ந்து இரயில்வே நிர்வாகம் 7.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறது. அதன்படி இரண்டாவது பாதையில் மதுக்கரை - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டர் உயரமும், 18.3 மீட்டர் அகலமும் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட நிலையில் தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளது. புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் யானைகள் ரயில் தண்டவாளத்திற்கு செல்லாமல் சுரங்கப்பாதை வழியாக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வசதியாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதன்படி மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இன்று தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாகு மற்றும் தமிழக வனத்துறை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி ஆகியோர் புதிய பாலத்தை ஆய்வு செய்தனர். மேலும் அங்கு அமைக்கப்பட உள்ள தெர்மல் கேமரா பயன்பாடு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த சுரங்கப்பாதையினால் இரயிலில் யானைகள் அடிபட்டு உயிரிழப்பது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.