கோவை : கொரோனா தடுப்பூசிக்காக கொட்டும் மழையில் குடை பிடித்து காத்திருந்த மக்கள்!
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 31 மையங்கள், ஊரகப்பகுதியில் உள்ள 30 மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட கூடிய பணிகளானது நடைபெற்று வருகிறது.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகாலை முதல், மழையில் குடை பிடித்தபடி 200 க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கோவையில் பத்து நாட்களுக்குப் பிறகு நேற்று தடுப்பூசி போடும் பணிகள் மீண்டும் துவங்கியது. இன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 31 மையங்கள், ஊரகப்பகுதியில் உள்ள 30 மையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் தடுப்பூசி போட கூடிய பணிகளானது நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 9 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இன்று மாவட்டத்தில் 25000 தடுப்பூசிகள் கையிருப்பில் இருக்கும் நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 31 சிறப்பு முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 8 மணி முதல் கோவிஷீல்ட் தடுப்பூசி மட்டும் செலுத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு மையத்துக்கும் தலா 250 தடுப்பூசிகள் வீதம் 7750 தடுப்பூசிகள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதே போல ஊரகப்பகுதிகளுக்கு 13,800 தடுப்பூசிகளும், சிறப்பு முகாம்களில் 2880 தடுப்பூசிகளும் போடப்படுகின்றது.
மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நஞ்சுண்டாபுரம் நாடார் பள்ளியில் உள்ள தடுப்பூசி முகாமில் மழையையும், பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடை பிடித்தபடி நீண்ட வரிசையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதாக காத்துள்ளனர். பலர் குடை இல்லாமல் மழையில் நனைந்தபடி தடுப்பூசிக்காக சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதேபோல சீரநாயக்கன்பாளையம், கல்வீரம்பாளையம், ஆர்.எஸ்.புரம், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்கள் சாலைகளில் நள்ளிரவு முதல் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் போராட்டம்
தடுப்பூசி செலுத்த காத்திருந்த பொதுமக்களுக்கு டோக்கன்கள் கிடைக்காததால் இன்று காலை பல்வேறு இடங்களில், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக வட மதுரை அரசு பள்ளி முன்பாக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், டோக்கன்கள் முறையாக விநியோகம் செய்யப்படவில்லை என கூறி அங்கிருந்த காவல்துறையினர், சுகாதாரத்துறை ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல பீளமேடு மாநகராட்சி பள்ளி முன்பாக நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் டோக்கன் கிடைக்காததால் ஆவேசமடைந்து தடுப்பூசி மையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். டோக்கன்களை அரசியல் கட்சியினர் வாங்கி செல்வதால் பொதுமக்களுக்கு டோக்கன் கிடைப்பதில்லை எனக் கூறி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் சமரசபடுத்தினர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொது மக்கள் ஆர்வமாக இருக்கும் நிலையில், அதற்கு ஏற்றபடி தடுப்பூசி போடுவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.