(Source: ECI/ABP News/ABP Majha)
கொரோனா அதிகரிப்பு: கோவையில் புதிய கட்டுப்பாடுகள் அமல் ; கேரள எல்லையில் தீவிர சோதனை!
கோவை மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது.
கேவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுப் பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினமும் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கோவை மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. அதன்படி பால், மருந்தகம், காய்கறி ஆகிய அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி, கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, காந்திபுரம், ஒப்பணகார வீதி, சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் இருப்பதால், தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் கேரளாவில் இருந்து கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் கோவைக்கு வருபவர்கள் இ பதிவு செய்துள்ளனரா என்ன சோதிக்கப்பட்ட பிறகே காவல் துறையினர் தமிழக எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர். கோவையில் கடந்த ஒரு வாரமாக நோய்தொற்று அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கொரோனா இன்மை சான்று அதாவது 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சான்றை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் வாளையார் சோதனைசாவடியில் வழக்கம் போல இ பதிவு செய்துள்ளனரா என சோதித்து தமிழக எல்லைக்குள் அனுப்பி வருகின்றனர்.
காவல் துறையினரின் சோதனைக்கு அஞ்சி ஒரு வழிப்பாதையில் தப்பி தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களை தடுக்க, காவல் துறையினர் புதிதாக தடுப்புகளை அமைத்துள்ளனர். கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு வாளையாறு சோதனைச் சாவடியில் 5-ஆம் தேதி முதல் இ பதிவுடன் கொரோனா நெகடிவ் சான்று, அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று உள்ளதா என சோதனை மேற்கொள்ளப்படுமென காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல தமிழ்நாடு முழுவதும் கேரளாவில் இருந்து வரும் பயணிகள் வருகின்ற 5 ம் தேதி முதல் கொரோனா நெகடிவ் சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட சான்றை காட்டினால் தான், அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பியமணியன் அறிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X