தப்பியோடிய விசாரணைக் கைதி ; மடக்கிப் பிடிக்கும்போது மயங்கி விழுந்த காவலர்..! கோவையில் பரபரப்பு..
ஜீவாவிற்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்ற போது, திடீரென காவலர் அஷ்ரப்பை தள்ளிவிட்டு தப்பி ஒடியுள்ளார். இதனால் அதிர்ச்சியைடைந்த காவலர் அஷ்ரப் ஜீவாவை பிடிக்க பின்னால் ஓடினார்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக அஷ்ரப் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக ஜீவா என்ற இளைஞர் ஆர்.எஸ்.புரம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜீவா என்பவரை காவல் நிலையத்திற்கு அஷ்ரப் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். ஜீவாவிற்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்ற போது, திடீரென காவலர் அஷ்ரப்பை தள்ளிவிட்டு தப்பி ஒடியுள்ளார். இதனால் அதிர்ச்சியைடைந்த காவலர் அஷ்ரப் ஜீவாவை பிடிக்க பின்னால் ஓடினார். அப்போது அப்பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஜீவா தப்பிக்க முயன்றார்.
தொடர்ந்து ஜீவா தடுப்புச் சுவரை தாண்டி குதிக்கும் போது, தவறி கீழே விழுந்தார். அப்போது ஜீவா மயக்கம் அடைந்தார். இதனிடையே அவரை பிடிக்க பின்னால் ஓடிச் சென்ற காவலரும் அதிர்ச்சியில் திடீரென மயங்கினார். பள்ளி வளாகத்தில் விசாரணைக் கைதியும், காவலரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் மயங்கி விழுந்த இருவரையும் தண்ணீர் தெளித்து எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஜீவா தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் அங்கிருந்த ஒருவர் பிடித்துக் கொண்டார்.
தப்பித்துச் செல்ல முயன்ற போது ஜீவாவின் கையில் உடைந்த கண்ணாடி துண்டுகள் ஏறியிருந்தன. அதனை அகற்றி அவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் பேரில் விரைந்து சென்ற காவல் துறையினர் ஜீவாவை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி தப்பி ஓடிவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக காவலர் மயங்கி விழுந்தார் என கூறப்படுகிறது. காவலர் அஷ்ரப் நலமுடன் உள்ளதாக ஆர்.எஸ்.புரம் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் கேட்ட போது, “கைவிலங்கிட்டு அழைத்துச் சென்ற ஒருவர் தப்பிக்க முயன்றதாக தெரிகிறது. பள்ளிக் கதவு திறந்திருந்ததால் பள்ளி வளாகத்திற்குள் ஓடி வந்து, மதில் சுவரை தாண்டி குதித்து தப்பியோட முயன்ற போது கீழே விழுந்தார். பின்னால் துரத்தி வந்த காவலரும் மயங்கி விழுந்தார். இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். இவர்களுக்கும், பள்ளிக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்