எஸ்.எம்.எஸ் போதும் ; அனைத்து பொருட்களும் வீட்டுக்கு வரும்! திமுக ஏற்பாடு!
தேவையான பொருட்கள் பட்டியலை முகவரி உடன் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் செய்தி அனுப்பினால் வீட்டிற்கு வந்து பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தொலைபேசியில் அழைத்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் திமுக சார்பில் பொதுமக்கள் குறுஞ்செய்தி அனுப்பினால் வீட்டிற்கே மளிகை பொருட்கள் கொண்டு செல்லும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வருகின்ற 7 ம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேசமயம் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய அரசு அனுமதியளித்துள்ளது. நேற்று முதல் மளிகைப் பொருட்கள் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மாநகரப் பகுதிகளை அடுத்து, சூலூர் பகுதி அதிக கொரோனா பாதிப்புகள் உள்ள பகுதியாக உள்ளது. தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக கருமத்தம்பட்டி பகுதியில் கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரசு அனுமதி பெற்று 20 வாகனங்களின் மூலம் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வார காலமாக வீட்டிற்கே சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மலிவு விலையில் முட்டை, ரொட்டி ஆகிய பொருள்கள் விற்பனையை துவக்கினர். இந்நிலையில் இன்று முதல் நடமாடும் மளிகைப் பொருட்கள் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள் பட்டியலை முகவரி உடன் குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் ஆப் செய்தி அனுப்பினால் வீட்டிற்கு வந்து பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல தொலைபேசியில் அழைத்தும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து திமுகவினர் கூறும் போது, “கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ளது. குறிப்பாக சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மிக அதிகமாக உள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நலன் கருதி அத்தியாவசிய தேவைகளான காய்கறி மற்றும் முட்டை, ரொட்டி ஆகிய பொருட்களை வழங்கி வருகிறோம். இந்நிலையில் பொதுமக்கள் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலை அலைபேசி எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பினால், அவர்கள் வீட்டிற்கே வந்து தருவதற்கு உண்டான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 6 நடமாடும் மளிகைப் பொருட்கள் வாகனங்கள் மூலம் இதனை துவக்கியுள்ளோம். இதற்காக 6 மளிகைக் கடைகளுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய இருக்கிறோம். இதனால் பொதுமக்கள் காய்கறி வாகனங்கள் எப்போது வரும் என காத்திருக்க வேண்டாம். மக்கள் தொடர்பு கொண்டதும் விரைந்து பொருட்கள் வழங்கப்படும். இதேபோல காய்கறி வாகனம் வரவில்லை என பொதுமக்கள் புகார் தரவும் தொடர்பு எண்களை அறிவித்துள்ளோம். பொதுமக்கள் புகார் அளித்தால் அடுத்த அரை மணி நேரத்தில் காய்கறிகளை வாகனங்கள் மூலம் கொண்டு சேர்க்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.
ட்விட்டரை அலற விடும் பிடிஆர்-வானதி சண்டை; ‛துர்நாற்றம், கீழ்த்தரம்’ என தொடர் அர்ச்சனை!