ட்விட்டரை அலற விடும் பிடிஆர்-வானதி சண்டை; ‛துர்நாற்றம், கீழ்த்தரம்’ என தொடர் அர்ச்சனை!
‛துர்நாற்றம் வீசும்போது ஜன்னலை மூடுவது போல், நான் உங்களை ட்விட்டரில் இருந்து ப்ளாக் செய்கிறேன்.’ என பழனிவேல் தியாகராஜன் சொல்ல, ‛நிதியமைச்சருக்கு விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பது வருத்தமானதே. அதனாலேயே இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார்,’ என வானதி பதிவிட்டுள்ளார்.
மாநில நிதி அமைச்சருக்கும் மத்தியில் ஆளும் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளருக்கும் இடையே வெடித்த வார்த்தைப் போர் வலுப்பெற்று ஒருவர் மற்றொருவரை ட்விட்டர் தளத்திலிருந்து பிளாக் செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறது.
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அண்மையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் முன்வைத்த கருத்து கோவா மாநிலத்தை அவமதித்துவிட்டதாக கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதான் சர்ச்சையின் ஆரம்பப் புள்ளி.
கடந்த சனிக்கிழமையன்று, சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மன்றத்தின் 43-வது கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் அவர் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். மேலும், "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் ஒரு கணக்கில் நிதி திரட்டுவது மற்றும் திரட்டப்பட்ட நிதியில் மாநிலங்களின் பங்கினை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாநில அரசுகளுக்கு விரக்தியும் கோபமும் ஏற்படுகிறது. இதனால், மாநில அரசுகள், சட்டப்படியாக தங்களுக்கு கிடைக்கவேண்டிய நிதிப் பங்கினைப் பெறுவதற்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகின்றன" என்று கூறியிருந்தார்.
அதேவேளையில், ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் கோவா போன்ற சிறிய மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோவா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கோடிகுன்ஹோ வைத்த கோரிக்கைக்கு நிதியமைச்சர் பிடிஆர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
கோவா மாநில போக்குவரத்து அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ கூறும்போது, ‛‛தமிழக நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் போது என்னை வாயைமூடும்படி சொன்னார். அவர் அளவில் பெரிய மாநிலத்திலிருந்து வருவதால் அவருக்கே கூடுதல் அதிகாரம் இருப்பதுபோல் நடந்து கொண்டார். அவர் கோவா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
For those who thought my "Quality Control" comment rhetorical or excessive...it was not. Please see scam details (2 pics). That this person hectors..🤦♂️
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 30, 2021
The people of Goa will not have forgotten the service of DMK's founder Arignar Anna, which no fly-by-nighter can erase (2 pics) https://t.co/3uEmPenZyo pic.twitter.com/0jVjY33Ote
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "நான் எந்தச் சூழலிலும் கோவா மாநில மக்களிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. நான் அனைத்து மாநில உரிமைகளுக்காகத் தான் பேசினேன். அதற்காக கோவா மக்களிடமிருந்து நான் ஏதும் நன்றியைக்கூட எதிர்பார்க்கவில்லை. நான் மாநில சுயாட்சி கொள்கை கொண்ட கட்சியில் வளர்த்தெடுக்கப்பட்டவன். அதன்படியே நின்றிருக்கிறேன்" எனப் பதிலளித்தார். மேலும், அன்றைய கூட்டத்தில் கோவா அமைச்சரின் பேச்சு வெற்றுப் பேச்சாக, ஆழமற்றதாக, நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதாக இருந்ததாகவும் பிடிஆர் விமர்சித்திருக்கிறார்.
Stop tagging me with your lies and do some real work for a change....
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 30, 2021
Are you just a congenital liar, or really that low IQ, that you think anyone insults anyone in a GST council meeting...
Wait, wait. Don’t answer that. It’s a trick question....
You’re both! https://t.co/INBXlHRxQv
மூக்கை நுழைத்த வானதி..
ஒரு மாநில அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மற்றொரு மாநில அமைச்சர் பதிலளித்துக் கொண்டிருக்க அப்போதுதான் மூக்கை நுழைத்தார் கோவை பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நமது நிதியமைச்சர் நடந்து கொண்ட விதம் மாநிலத்தின் கவுரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல். தேசிய அளவிலான கூட்டத்தில் மற்றொரு மாநில அமைச்சரை வசைபாடுவது என்பது தமிழகத்திற்கு எவ்வித நன்மையையும் ஏற்படுத்தாது" என ட்வீட் செய்து அதில் நிதியமைச்சரையும் டேக் செய்தார்.
You once accused a fellow DMK spokesperson of being “unhappy that there weren’t more corpses to play politics with”🤦🏼♂️
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 30, 2021
I block you like a normal person closes a window to avoid a bad smell
Getting a “good character” certificate from you’d be demeaning
Don’t waste my time pls https://t.co/KQ5fl3auYG
பொறுத்தது போதும்...
வானதியின் ட்விட் வைரலாக, பொறுத்தது போதும் எனப் பொங்கிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "உங்கள் பொய்களுடன் என்னை ட்விட்டரில் டேக் செய்வதை நிறுத்துங்கள். ஏதாவது பயனுள்ள பணிகளை செய்யுங்கள். நீங்கள் பிறவிப் பொய்யரா அல்லது அறிவுத்திறன் குறைந்த அளவில் கொண்டவரா?!. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் யாரேனும் வசைபாடி வாக்குவாதத்தில் ஈடுபடுவார்களா? ஒருநிமிடம் நீங்கள் இதற்கு பதிலளிக்க முற்படாதீர்கள். நீங்கள் இரண்டுமே தான் " என்று காட்டமாகப் பதிவிட்டார்.
அத்துடன் நிற்கவில்லை..
நிதியமைச்சர் அத்துடன் நிற்கவில்லை. மற்றுமொரு ட்வீட்டில், "நீங்கள் ஏற்கனவே திமுக செய்தித் தொடர்பாளர் ஒருவரை மோசமாக விமர்சித்தீர்கள். அரசியல் செய்ய பிணங்கள் இல்லாததால் அவர் சோகத்தில் இருப்பதாக தரக் குறைவாகப் பேசினீர்கள். அதனால், துர்நாற்றம் வீசும்போது ஜன்னலை மூடுவது போல், நான் உங்களை ட்விட்டரில் இருந்து ப்ளாக் செய்கிறேன். உங்களைப் போன்றவர்களிடமிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் வாங்குவதே கீழ்த்தரமானது. எனது நேரத்தை வீணாக்காதீர்கள்" என்று பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
Your political maturity and social etiquette is shown in your words.
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 30, 2021
Personally insulting people and hurling abuses are testaments to your character @ptrmadurai.
If work was considered as being rude and immature, it appears that you’re excelling at it. Be mindful of ur words. pic.twitter.com/aXLUBvnuKu
சாடிய வானதி
தமிழக நிதி அமைச்சரின் இந்த பதிவு, வானதிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. நிதியமைச்சர் தன்னை ட்விட்டரில் பிளாக் செய்த ஸ்கிரீன்ஷாட்டை வெளியிட்ட அவர், "நிதியமைச்சருக்கு விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லை என்பது வருத்தமானதே. அதனாலேயே இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார். நீங்கள் என்னை பொய்யர் என அழைக்கலாம், ஐக்யூ குறைபாடு கொண்டவர் எனக் கூறலாம். என்ன சொன்னாலும் உண்மையை மறைக்க முடியாது. எச்.ராஜா, சத்குரு மீது நீங்கள் முன்வைத்த கருத்துகள் உங்களின் நடத்தையைச் சொல்லும்" என பதிலளித்திருக்கிறார்.