டி23 புலி ஆட்கொல்லியே இல்லைங்க.. புதுத்தகவல் சொல்லும் முதுமலை புலிகள் காப்பக அதிகாரி!
முதுமலை வனப்பகுதியில் புதர் அதிகமாக இருப்பதால், அதை பிடிப்பதில் கஷ்டமாக இருக்கின்றது. புலி இருக்கும் இடத்தை 4 மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை கள இயக்குநர் அருண்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், முதலில் புலியை பின் தொடர்வது கஷ்டமாக இருந்தது. நேற்றில் இருந்து டி 23 புலியை பின் தொடர்கிறோம். முதுமலை வனப்பகுதியில் புதர் அதிகமாக இருப்பதால், அதை பிடிப்பதில் கஷ்டமாக இருக்கின்றது. புலி இருக்கும் இடத்தை 4 மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
வனத்தில் புதர்களில் அடிக்கடி புலி பதுங்கிக் கொள்கின்றது. இன்றில் இருந்து புலியை பிடிக்கும் வியூகத்தை மாற்றி இருக்கின்றோம். 4 ,5 இடங்களில் பரண் அமைத்து கண்காணித்து வருகிறோம். நாளை காலை முதல் பரண்களில் இருந்து கண்காணிப்பு இருக்கும். சீக்கிரம் மயக்க மருத்து செலுத்தி புலி பிடிக்கப்படும். புலியின் உடல் நிலை நன்றாக இருக்கின்றது. இன்று எருமையை கொன்றது டி 23 புலியா என்பதை நாளை தான் உறுதிப்படுத்த முடியும்.
டி 23 புலியை கண்காணிக்க 50 கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூடுதலாக 35 இடங்களில் கேமரா பொருத்தப்பட இருக்கிறது. சிங்காரா ,மே பீல்டு ஆகிய பகுதிகளில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட இருக்கின்றது. தினமும் காலை 7 மணிக்கு முன்பாக கேமரா ஆய்வு செய்யப்படும். கேரளா வனத்துறை குழு திரும்பி வந்து மீண்டும் புலியை தேடும் பணிகளில் ஈடுபடுவர். கூடுதலாக இரண்டு மருத்துவர்கள் இந்த ஆப்ரேசனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புலி நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. டி 23 புலியை ஆட்கொல்லி புலி வரிசையில் கொண்டு வர முடியாது. இந்த ஆப்ரேசனில் மோப்பநாய்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. எந்த நேரத்திலும் புலி பிடிபட வாய்ப்புள்ளது” என அவர் தெரிவித்தார்.
டி23 புலி நான்கு மனிதர்களை கொன்றாலும் ஒருவரை மட்டுமே தின்றுள்ளது. தொடர்ந்து மனிதர்களை தாக்கி உணவாக உட்கொண்டால் மட்டுமே ஆட்கொல்லி வரிசையில் சேர்க்கப்படும் என்பதும் அவரின் விளக்கமாக உள்ளது
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது.
டி 23 புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருப்பதால், புலியின் இருப்பிடத்தை கண்டறிவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 11 வது நாளாக புலியை பிடிக்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், நாளையும் இப்பணிகள் தொடர உள்ளது.