வியக்க வைக்கும் 3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் - பராமரிப்பின்றி அழியும் அவலம்..!
வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளிலும், அதையொட்டிய வனங்களும் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இங்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களை யானைகளை பிடித்து பழக்கப்படுத்தி பயன்படுத்தியதற்கான வரலாற்று சான்றாய், பதிமலை விளங்குகிறது. தமிழக-கேரள எல்லையோரத்தில் உள்ள வேலந்தாவளம் அருகேயுள்ள குமிட்டிபதி கிராமத்தில், பதிமலை என்ற பாறைக் குன்று உள்ளது. முருகன் கோயிலையொட்டி அமைந்துள்ள இந்த குன்று, கீழ் பகுதியில் பல குகைகளைக் கொண்டுள்ளது. அதில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்த குகைகளில் பல பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன.
வெண்மை நிறத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களில் யானை ஒன்றை, அதன் மேலிருந்து கட்டுப்படுத்திச் செல்லும் மனிதனும், அவற்றைச் சுற்றி பெரிய பெரிய கோடுகள் குறுக்கும் நெடுக்குமாகவும் உள்ளன. சுமார் 4 அடி அகலமும், 2 அடி உயரத்திலும் உள்ள இந்த பாறை ஓவியம், அப்பகுதியில் யானைகள் வாழ்விடமாக இருந்ததற்கு உதாரணமாக கூறப்படுகிறது. மேலும் திருவிழாவினை காட்சிப்படுத்தும் வகையில் தேரினை வடம் பிடித்து இழுக்கும் ஓவியங்களும் காணப்படுகின்றன.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ”வேளம் என்றால் யானை எனவும், தாவளம் என்றால் சந்தை எனவும் பொருள்படும். வேலந்தாவளம் என்பது யானைச்சந்தையை குறிக்கும் ஊர் பெயர் என அறியப்படுகிறது. அருகேயுள்ள மாவூத்தம்பதி என்பது யானைப்பாகன்கள் வசிப்பிடமாக இருந்துள்ளது. அங்குள்ள வனப்பகுதியில் கொப்பம் என்ற குழிகளை ஏற்படுத்தி யானைகளை பிடித்துள்ளனர் என்பதற்கான சான்றுகளும் உள்ளன. யானைகளை மனிதர்கள் கட்டுப்படுத்தி வாழ்ந்ததையே குமிட்டிபதி பாறை ஓவியம் விளக்குகிறது. யானைகளை விற்கும் இடமாகவும், பழக்கப்படுத்தும் இடமாகவும் இந்த பகுதிகள் இருந்துள்ளன. இவை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட பழமையான பாறை ஓவியம்” எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “தமிழகத்தில் உள்ள பாறை ஓவியங்கள் பலவும் எளிதில் பார்க்க முடியாத வகையில் அடர்ந்த காடுகளுக்குள்ளேயே இருக்கின்றன. ஆனால் குமிட்டிப்பதியில் உள்ள பாறை ஓவியம் எளிதில் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இதுவே பதிமலை பாறை ஓவியங்களுக்கு சாபக்கேடாக அமைந்துள்ளது. இந்த குகைகள் சமையலுக்கான இடமாகவும், மது அருந்தும் இடமாகவும், சமூக விரோத செயல்களுக்கான இடமாகவும் இருக்கிறது. கரிக்கோடுகளால் கிறுக்குதல், பெயர்களை எழுதுதல் ஆகியவற்றாலும், சமையல் செய்வதால் ஏற்படும் புகையாலும் ஓவியங்கள் அழிந்து வருகின்றன. இந்த பாறை ஓவியங்களின் சிறப்புகள் குறித்த எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததால், பலரும் அறியாமல் வரலாறு சிறப்புமிக்க சின்னங்களை சேதப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே பல ஓவியங்கள் அழிந்து உள்ளன. அழியும் நிலையில் மீதமுள்ள பாறை ஓவியங்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.
குமிட்டிபதி பாறை ஓவியங்களை புனரமைத்து பாதுகாத்தால் ஆய்வு மாணவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.